கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை இருந்தால், வேலையில் எவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்பதை ஓர் இந்திய தொழில்நுட்ப வல்லுநரின் உண்மை கதை நிரூபித்துள்ளது. இவர், தனது ஆரம்ப மாத சம்பளமான வெறும் ரூ. 18,000-இல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தற்போது, அவரின் விடா முயற்சியால் தனது சம்பளத்தை 10 மடங்கு உயர்த்தி, தற்போது மாதம் ரூ. 1.8 லட்சம் ஈட்டுவதாக சமூக வலைதளத்தில் (ரெடிட்) உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது.
சிறிய தொடக்கம், பெரிய இலக்கு : "நான் 5 வருடங்களுக்கு முன்பு மிகச் சிறிய ஸ்டார்ட்அப் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தபோது, என் சம்பளம் வெறும் ரூ. 18,000 தான். அது சவாலான காலம். அதிக நேரம் உழைக்க வேண்டியிருந்தது, நிறைய தவறுகள் செய்தேன். ஆனால், எல்லாவற்றிலும் இருந்து கற்றுக்கொண்டேன்" என்று அந்த இளைஞர் தனது பயணத்தின் ஆரம்பக் காலத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ளார்.

ரியாக்ட் (React), நோட்.ஜே.எஸ் (Node.js), பைதான் (Python) மற்றும் AWS போன்ற தொழில்நுட்பங்களில் தனக்கு உள்ள திறமைதான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று, ஒரு சிறந்த வேலையில் மாதம் ரூ. 1.8 லட்சம் சம்பளத்துடன் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 5 வருட உழைப்புக்குக் கிடைத்த 10 மடங்கு வளர்ச்சி இது.
இரவு கண் விழித்து வேலை செய்தது, கஷ்டமான வேலைகளை சமாளித்தது என எல்லாவற்றிற்கும் இப்போது பலன் கிடைத்துள்ளது" என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரையும் நம்பிக்கையுடன் தங்கள் வேலையை தொடர வேண்டும் என்றும் ஊக்கமளித்துள்ளார்.
இந்த இளைஞரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பலர் அவருக்கு வாழ்த்து கூறியதோடு, தங்களைப் போன்ற பலரின் வெற்றியையும் அதில் பகிர்ந்தனர்.
"உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இது மிகவும் ஆச்சரியமான வளர்ச்சி" என்று ஒருவர் கூறினார். மற்றொருவர், "நானும் உங்களைப் போலத்தான். நான் பயிற்சி ஊழியராக ரூ. 13,000 சம்பளத்தில் ஆரம்பித்தேன். 6 ஆண்டுகளில் இப்போது மாதம் ரூ. 1.8 லட்சம் வரை சம்பாதிக்கிறேன். இந்தக் கடினமான பயணத்தில் சோர்வு, புதிய கற்றல் மற்றும் சிறிய வெற்றிகள்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்தன" என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த தொழில்நுட்ப வல்லுநரின் வெற்றி, கையில் உள்ள திறமைகளையும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் சரியாக பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே வாழ்வில் மிகப்பெரிய நிதி வெற்றியை அடைய முடியும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications