இந்திய டெவலப்பர்கள் மத்தியில் ரெடிட் பயனர் நண்பரின் தொழில் வளர்ச்சி குறித்த பதிவு ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டெவலப்பர் வெறும் 5 ஆண்டுகளில் ரூ.2.2 லட்சம் ஆண்டு சம்பளத்தில் இருந்து ரூ.32.4 லட்சதிற்கு உயர்ந்துள்ளதோடு, தற்போது புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி வருகிறார்.
2019இல் தொடங்கிய தொழில் பயணம் : இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.2.2 ஆண்டு சம்பளத்தில் டெவலப்பராக சேர்ந்தார். அப்போது 80 ஊழியர்களைக் கொண்டிருந்த அந்த நிறுவனம், இவர் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் 10 மடங்கு வளர்ச்சியடைந்தது.

அதன் பிறகு, பைதான் பின்தள (Backend Python) டெவலப்பராக முதல் சர்வதேச ஒப்பந்தப் பணியைப் பெற்றார். அவருக்குத் தொடக்கத்தில் மணிக்கு 6.5 அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர், இரண்டு மாதங்களிலேயே மூத்த டெவலப்பராக பதவி உயர்வு பெற்று, மணிக்கு 10 டாலர் சம்பாதிக்க தொடங்கினார்.
சுமார் 3 ஆண்டுகள் பணியாற்றிய அவர், இறுதியில் மணிக்கு 12 டாலர் வரை ஊதிய உயர்வு பெற்றார். இருப்பினும், வாடிக்கையாளர் உள்நாட்டிலேயே ஒரு குழுவை அமைத்ததால் அந்தப் பணி முடிவுக்கு வந்தது. பின்னர், உடனடியாக டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு உற்பத்தி நிறுவனத்துடன் ஓடூ (Odoo) ஃபிரேம்வொர்க்கை அமைப்பதற்காக ரூ.18.6 ஆண்டு சம்பளத்தில் 3 மாத ஒப்பந்தத்தில் சேர்ந்தார். ஆனால், அங்கு வேலைப்பளு அதிகரித்ததால், மேலும் இருவரை பணியமர்த்தி அவர்களுக்கு வழிகாட்டி, பின்னர் மேலும் இரண்டு புதியவர்களை சேர்த்தார்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு : கடந்தாண்டு (2024) மார்ச் மாதத்தில், மற்றொரு நிறுவனம் அவருக்கு ரூ.30 லட்சம் ஆண்டு சம்பளம் வழங்க முன்வந்தது. இதைக் கேள்விப்பட்ட அவரது தற்போதைய நிறுவனம், அதே தொகையை வழங்கி, அவருக்கு தொழில்நுட்பக் குழுத் தலைவர் (Technical Team Lead) பதவியையும் வழங்கியது. தற்போது அவரது மொத்த ஆண்டு வருமானம் (CTC) ரூ.32.4 லட்சம் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, தற்போது அவர் பணிபுரியும் நிறுவனம் தங்கள் ERP அமைப்பை SAP-க்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிய அமைப்பு முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், அவரது தற்போதைய பதவிக்கு அவசியம் இருக்காது. ஏறக்குறைய 7 ஆண்டுகள் அனுபவத்துடன், ரூ.32.4 லட்சம் சம்பளத்தில் இருக்கும் அவர், தற்போது மூத்த டெவலப்பர் அல்லது குழுத் தலைவர் பணிகளுக்காக சந்தையில் வேலை தேடி வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து விண்ணப்பித்தும், அவருக்கு ஒரே ஒரு நேர்காணல் அழைப்பு மட்டுமே வந்துள்ளது. அவரது இந்த வேகமான தொழில் வளர்ச்சியை ரெடிட் பயனர்கள் பாராட்டியதோடு, சிலர் DevOps அல்லது MLOps போன்ற சிறப்புத் துறைகளில் (Niche) நிபுணத்துவம் பெறும்படி ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்தப் புதிய சவாலைச் சமாளிக்க, அவர் சந்தையில் தனக்கான சரியான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications