நல்ல வேலை, கை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை என்றிருந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், குறுக்கு வழியில் கோடீஸ்வரராக ஆசைப்பட்டு தில்லுமுல்லு செய்தது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவில் வசிப்பவர் 31 வயதான ரவி ரத்தோர். இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர். ரவிக்கு ஆண்டு வருமானம் 30 லட்ச ரூபாய். கை நிறைய சம்பளம் கிடைத்தும் திடீரென ரவிக்கு பணத்தின் மிகுந்த ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தன்னுடைய சாப்ட்வேர் அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாமல் போலியாக ஒரு டிரேடிங் அப்ளிகேஷனை உருவாக்க பயன்படுத்தியிருக்கிறார். அது மட்டுமின்றி போலியான வெப்சைட் ஒன்றையும் திறந்திருக்கிறார். இந்த இரண்டு தளத்தையும் தான் பிரத்தியேகமாக மோசடி செய்வதற்காக பயன்படுத்தியுள்ளார். சில நாட்களாக பங்குச்சந்தை தொடர்பான மோசடிகள் அதிகரித்து வந்ததை பார்த்தோம்.
மோசடி எப்படி நடந்தது?: ரவி தனியாக மோசடி சம்பவத்தில் ஈடுபடவில்லை. மாறாக தனக்கென ஒரு கும்பலை வைத்துக்கொண்டு செயல்பட்டிருக்கிறார். பங்குச்சந்தை மோசடிகளில் நடப்பது போலவே தங்களுக்கென உருவாக்கிய போலி இணையதளத்தில் நஷ்டமே வராது, இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறி மக்களிடம் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.

முதலீடு தொடர்பான மோசடிகளில் மோசடிக்காரர்கள் கையாளும் யுக்தி என்ன தெரியுமா? பணத்தை அனுப்பிய பிறகு அவர்கள் உருவாக்கிய போலி தளத்தில் அதிக லாபம் ஈட்டியது போல காண்பிப்பது தான். அதே யுக்தியை தான் இவர்களும் கையாண்டுள்ளனர். இதனால் மக்களும் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வீசியுள்ளனர். இந்த கும்பல் செய்த மற்றொரு விஷயம் தான் ஹைலைட். பெண்களாக இருந்தால் ஆண்களை வைத்து பணம் பறித்துள்ளனர். அதுவே ஆண்களாக இருக்கும் பட்சத்தில் பெண்களை வைத்து ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
மோசடி கும்பல் பிடிபட்டது எப்படி?: இந்த கும்பலிடம் சிக்கி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 10,000 ரூபாயை இழந்திருக்கிறார். எப்பொழுதும் போல அந்த நபருக்கும் டிஸ்ப்ளேவில் அதிக லாபம் கிடைத்தது போல காண்பித்துள்ளனர். அவர் தனது பணத்தை எடுக்க முயன்ற போது ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும், வரி செலுத்த வேண்டும் என்று கூறி மீண்டும் மீண்டும் பணம் கேட்டுள்ளனர். அப்போதுதான் அந்த நபர் உஷாராகியுள்ளார்.
உடனடியாக சைபர் க்ரைம் போர்டலில் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரின் பேரில் மே 1-ஆம் தேதி என்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் பெங்களூரு மற்றும் மத்திய பிரதேச போலீஸார் பல மாநிலங்களில் அதிரடி சோதனையை நடத்தி, ரவி ரத்தோர் மற்றும் அவருடைய கூட்டாளிகளான சுதாமா, விகாஸ் ஆகியோரையும் கைது செய்தனர்.
ரவி ரத்தோரிடம் இரண்டு லேப்டாப்கள் மொபைல் போன் மற்றும் ஒரு எஸ்யூவி கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல சுதாமா மற்றும் விகாஸ் ஆகியோரிடம் இருந்து 17 மொபைல் போன்கள், 5 கம்ப்யூட்டர்கள், 13 சிம்கார்டுகள், பேங்க் அக்கவுண்ட் ரெக்கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் விசாரணையில் ரவி ரத்தோர் தன்னுடைய சாப்ட்வேர் அறிவை பயன்படுத்தி டிரேடிங் பிளாட்பார்மை உருவாக்கியது தெரியவந்துள்ளது. அதேபோல சுதாமா மற்றும் விகாஸ் ஆகியோர் முதலீட்டாளர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து பேச தொடங்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய தளத்தில் சுமார் 636 அக்கவுண்டுகள் உருவாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 636 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
அடுத்த வருவது தான் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் சுமார் 14,232 பண பரிவர்த்தனைகளை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.99.77 கோடியை அபகரித்துள்ளனர். அந்த பணத்தின் ஒரு பகுதியை அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சொத்துக்களை வாங்க பயன்படுத்தியதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் தங்களுடைய சாப்ட்வேர் அறிவை மோசடிக்காக பயன்படுத்துவது வேதனை அளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. ஒரு வேலை உங்களுக்கு பங்குச்சந்தையில் அதிக நாட்டம் இருந்தால், செபி போன்ற அரசு அமைப்புகள் உருவாக்கிய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் லாபத்தை எடுக்க முயற்சிக்கும் போது கட்டணம் செலுத்த சொன்னால் அது மோசடியாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முதலீடு செய்த அடுத்த நாளே பணம் இரட்டிப்பாகும் அல்லது மூன்று மடங்காகும் என்று சொன்னால் அது நிச்சயம் போலியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இது போன்ற செய்திகளை படிக்கும் போது உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கட்டும்!


Click it and Unblock the Notifications