என்னதான் வாழ்க்கை சில நேரங்களில் தவிர்க்க முடியாத சவால்களையும், சிரமங்களையும், சிக்கல்களையும் கொண்டு வந்தாலும், விட்டுக் கொடுக்காமல் விடாமுயற்சியுடன் இருப்பவர்கள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். இதனை நிரூபிக்கும் வகையில் அலிகாரை சேர்ந்த ஒரு மாணவர் சாதித்துக் காட்டியுள்ளார். கூலி தொழிலாளியாக வேலைக்கு சென்று ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பளமாக பெற்று வந்த ககன், தற்போது ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இவருடைய சுவாரஸ்ய கதையை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
ககன் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரியும் போதே JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கு தயாராகியுள்ளார். தேர்வில் அகில இந்திய ரேங்க் பெற்று அவருடைய குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், நேர்மையான முயற்சிகள் என்றுமே வீண் போகாது என்பதை ககன் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

எந்த சூழ்நிலை வந்தாலும் ஐஐடி-யில் சேர்வதில் மட்டும் உறுதியாக இருந்தார் ககன். இருப்பினும் இதுபோன்ற விஷயங்கள் எளிதான பயணம் கிடையாது. பகலில் வேலை செய்தால், படிப்பதற்கு சிறிது நேரமே இருக்கும். அப்படியானால் இரவில் அதிக நேரம் படிக்க வேண்டும்.
அப்படி கஷ்டப்பட்டு படித்து தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் படிப்பில் செலுத்தி தற்போது அகில இந்திய ரேங்க் பெற்றுள்ளார் ககன். தற்போது அவருடைய விடாமுயற்சியின் காரணமாக IIT BHU-இல் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பிற்கு அவருக்கு அட்மிஷன் கிடைத்துள்ளது.
மேலும் பிசிக்ஸ் வாலாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான அலக் பாண்டே உடனான இன்டர்வியூவில் ககன், தான் ஐஐடி-யில் சேர்வதைத் தான் முதன்மையான இலக்காக வைத்திருந்ததாக பகிர்ந்து உள்ளார். இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றை எழுதி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி இத்தகைய வெற்றியைப் பெற்ற ககனுக்கு உதவும் வகையில் அலக் பாண்டே ரூ. 4 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 5686-வது இடத்தை ககன் பெற்றுள்ளார்.
ககனின் தந்தை கேஸ் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் வேலை செய்கிறார். ஒரு நாளைக்கு இவருடைய சம்பளம் 350 ரூபாய் என்று கூறப்படுகிறது. குடும்ப பொறுப்பை ஏற்று பகல் நேரத்தில் வேலைக்கு சென்று, இரவு நேரங்களில் மட்டுமே படித்து, இத்தகைய பெரிய வெற்றியை அடைந்த ககனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
எந்தவிதமான கடினமான சூழ்நிலைகள் வந்தாலும், இலக்கை நோக்கி ஓட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ககனின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications