எந்த ஒரு வேலையானாலும் சரி, அவற்றை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. ஒரு சிறிய முயற்சியில் ஆரம்பித்து கோடிகளில் சம்பாதிக்கும் பலரும் நம் நாட்டில் உள்ளனர். அதற்குச் உதாரணமாக பல வெற்றிக் கதைகளை படித்திருப்போம். இன்றும் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி தான் பார்க்க உள்ளோம். தெருவோரமாக பானிபூரி கடை ஆரம்பித்து தற்போது 2 பரந்து விரிந்த வீடுகளுக்கு சொந்தக்காரர் ஆகி தனது மகனையும் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளார் அருண் ஜோஷி என்ற நபர். இவரின் இந்த சாதனைக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஜோஷி ஹியூமன்ஸ் ஆப் பாம்பேக்கு அளித்த பேட்டியில் அவரைப் பற்றி கூறியுள்ளார். ஜோசியின் தந்தை 1960-ஆம் ஆண்டில் மும்பைக்கு வந்துள்ளார். அங்கு ஒரு பானி பூரி ஸ்டாண்டை அமைத்துள்ளார். ஜோஷியின் தந்தை தன் குடும்பத்திற்காக அயராது உழைத்து உள்ளார். மிகவும் கடினமான காலங்களிலும் ஜோஷி மற்றும் அவரின் சகோதரருக்கு உணவு மற்றும் அத்யாவசிய செலவுகளை செய்வதில் உறுதியாக இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஜோஷியின் தந்தை தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கடையை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தன் வணிகத்தை மேம்படுத்த முடியும் என்ற உறுதியோடு உழைத்துள்ளார்.
அவர் தனது வணிகத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கு முன், துரதிர்ஷ்டவசமாக, ஜோஷியின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக குடும்பத்தின் சேமிப்பில் சேர்த்து வைக்கப்பட்ட 60,000 முழுவதுமாக செலவழிக்கப்பட்டது. வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஜோஷி பேல்பூரி கடைக்கு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஜோஷி குடும்பத்திற்காக உழைத்துள்ளார். அப்போது அவருக்கு தினக்கூலியாக 5 ரூபாய் கிடைத்துள்ளது.
அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து ஜோசியின் தந்தைக்கு உடல்நிலை சீரானது. இதனால் மீண்டும் ஜோஷியின் தந்தை கடையை திறந்தார். அதற்குள் ஜோஷி தனது தந்தை 4 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மெனுவில் சில பல மாற்றங்களை செய்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்களை கவர்ந்து தனது கடின உழைப்பின் மூலம் அதிக வருமானம் ஈட்டி 2019-ஆம் ஆண்டில் சொந்தமாக கடையை திறந்துள்ளார். இப்போது ஜோஷிக்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஜோஷிக்கு இரண்டு குழந்தைகள் அதில் ஒருவர் அமெரிக்காவில் உள்ளார்.
பானி பூரி கடையில் என்ன வித்தியாசமாக கொண்டு வர முடியும் என்று நினைக்காமல் பல்வேறு சாட் ஐட்டங்களை செய்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளார் ஜோஷி. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகரித்ததால் தாங்கள் நினைத்த அனைத்தையும் பெற்றதாக கூறுகிறார் இந்த சாதனை மனிதர்.
சிறிய கடையாக இருந்தாலும், பெரிய கடையாக இருந்தாலும் அல்லது வாடகை கடையாக இருந்தாலும் எந்த அளவிற்கு கடின உழைப்போடு செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு விரைவில் வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்பதற்கு ஜோசியின் கதை ஒரு சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications