ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிட்டாய் விற்பனை செய்த சிறுவன் இன்று ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை கட்டி எழுப்பியிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? வெற்றி என்பது ஒரே இரவில் வந்து விடாது. அப்படித்தான் பல போராட்டங்கள் மற்றும் தோல்விகளைச் சந்தித்து இன்று கோடிக்கணக்கான மக்களுக்கு பிடித்த பிராண்டை உருவாக்கி இருக்கிறார் ஒரு நபர். யார் அவர்? எப்படி இத்தகைய வெற்றி சாத்தியமானது என்ற விவரங்களைப் பார்ப்போம்
தென்னிந்தியர்கள் விரும்பி பயன்படுத்தும் பிராண்ட் என்று "ஆச்சி மசாலா" பிராண்டைக் கூறலாம். மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற இந்த பிராண்டை உருவாக்கியவர் ஏ.டி.பத்மசிங் ஐசக்.
இளமைப் பருவம்: விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் பத்மசிங். இவருக்கு 12 வயது இருக்கும்போதே துரதிஷ்டவசமாக அவருடைய தந்தை காலமானார். இளம் வயது முதல் கணவனை இழந்த தாயாரால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வளர்க்கப்பட்டவர் பத்மசிங்.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தன் தாயின் எல்லையற்ற அன்பிலும், அரவணைப்பிலும் இவருடைய இளமைப் பருவம் இருந்தது. தன் தாயாரின் சமையலையும் அவர் சமைக்கும் சுவையான சாப்பாட்டையும் பார்த்தே வளர்ந்தவர் இவர். அவர் உபயோகிக்கும் தனித்துவமான மசாலாக்களின் சுவையே பிற்காலத்தில் அவரை பெரிய பிராண்டை கட்டி எழுப்ப உதவியாக அமைந்தது. தந்தையை இழந்ததால் பத்மசிங் பள்ளியில் படிக்கும் போதே கோடை விடுமுறை காலத்தில் தற்காலிகமாக கடை வைத்து இனிப்புகள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்து வந்தார்.
கல்லூரி படிக்கும் போது ஃபினைல் தயாரித்து மருத்துவமனைக்கு வழங்கி வந்தார். இந்த ஆரம்பக் கால வணிகம் தான் அவருக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்தது. ஒரு தயாரிப்பை மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும்? வாடிக்கையாளர்களின் தேவை என்ன? புதிய வாய்ப்புகளை எப்படி தேடுவது? என்ற அனுபவங்களை எல்லாம் கற்றுக் கொண்டார். இந்த திறன்களே அவருக்கு பிற்காலத்தில் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க அடித்தளமாக அமைந்தது.
கார்ப்பரேட் நிறுவனத்தில் கிடைத்த அனுபவம்: ஆச்சி மசாலா பிராண்டை தொடங்குவதற்கு முன்பு கோத்ரேஜ் நிறுவனத்தில் சுமார் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு சேல்ஸ், டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் பிராண்ட் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். மேலும் மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் அவருடைய பணி அனுபவம் உதவியது.
அவருடைய மார்க்கெட்டிங் அனுபவத்தைப் பற்றி தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். பத்மசிங், கோத்ரேஜ் நிறுவனத்தின் ஹேர் டை விளம்பரத்திற்கு தான் செய்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார். விளம்பரத்திற்காக காங்கேயம் காளைகள் எல்லாம் பங்கேற்கும் ஒரு கிராமத்து சந்தைக்கு சென்று.. காளையின் வாலில் ஹேர் டையை பூசி காண்பித்துள்ளார்.
இப்படித்தான் கோத்ரேஜ் நிறுவன தயாரிப்பின் தரத்தை மக்களுக்கு காட்டியுள்ளார். அவருடைய மார்க்கெட்டிங் மக்களின் மனதைக் கவரவே உடனடியாக பல ஹேர் டை பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இவர் பிற தயாரிப்புகளை விட தன்னுடைய தயாரிப்பில் இருக்கும் தனித்துவம் என்ன என்பதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் திறமை பெற்றவர் என்றே சொல்லலாம்.
பின்னர் பத்மசிங் திருமணம் செய்து கொண்டார். அப்போது பத்மசிங்கின் தாயார் தன்னுடைய மருமகளுக்கு காலம் காலமாக தான் பயன்படுத்தி வந்த தனித்துவமான மசாலா தயாரிப்பு முறைகளை கற்றுக் கொடுத்தார். அப்போது தான் பத்மசிங் மனதிற்குள் ஒரு யோசனை தோன்றியது.
தினமும் மணிக்கணக்காக சமையலறையில் மசாலாக்களை வறுத்து அரைத்து பெண்கள் சிரமப்படுகின்றனர். இவர்களின் சுமையை குறைத்தால் என்ன? என்று யோசித்தார். அப்போது தான் தன் தாயின் கை மனமும் பாரம்பரிய சுவையும் மாறாத மசாலா பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் அவருக்குள் வந்தது.
ஆச்சி பிராண்டின் உருவாக்கம்: 1995-ஆம் ஆண்டு ஆட்சி குரூப் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் எஃப்எம்சிஜி துறை கிடு கிடுவென வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் பெரிய தயாரிப்புகளில் பத்மசிங் களம் இறங்கவில்லை. குழம்புக்கு பயன்படுத்தும் குழம்பு மிளகாய்த்தூள் என்ற ஒரே தயாரிப்பு மட்டும் தான் ஆச்சி குரூப் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்தது.
இந்த முதல் தயாரிப்பை பத்மசிங்கின் மனைவி தெல்மா உதவியுடன் செய்தார். வீடுகளில் பெண்கள் மசாலா பொருட்களை அரைத்து சிரமப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தங்கள் முதல் தயாரிப்பை சந்தைக்கு கொண்டு வந்தனர். அந்த காலத்தில் அவ்வளவாக பெரிய பிராண்டுகள் எதுவும் இல்லை. அதையும் மீறி மசாலா பொருட்கள் விற்கப்பட்டாலும் பாலித்தீன் பாக்கெட்டில் தான் விற்கப்படும்.
ஆனால் ஆச்சி நிறுவனம் இதை செய்யவில்லை. ஆச்சி நிறுவனத்தின் தயாரிப்பு தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக பேக்கேஜ் செய்யப்பட்ட பிராண்டாக.. நிறுவனத்தின் பெயர் மற்றும் பிற விஷயங்களை அச்சிட்டு விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆச்சி நிறுவனத்தின் தயாரிப்பை வாங்கி வந்தனர்.
தங்கள் முதல் குழம்பு மசாலாவை ரூ.2 என்ற மலிவு விலையில் அறிமுகப்படுத்தியது. மக்கள் எளிதில் வாங்கும் விலையில் அமைந்ததால் தொடர்ந்து இவர்களுடைய தயாரிப்புக்கு வரவேற்பு கிடைத்தது.
விரிவடைந்த தொழில்: மிளகாய் தூள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்ததால் ஆச்சி நிறுவனம் பிற மசாலா பொருட்களையும் அறிமுகப்படுத்தியது. சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, சிக்கன் 65 மசாலா, பெப்பர் சிக்கன் மசாலா, நாட்டுக்கோழி மசாலா, மட்டன் மசாலா, மீன் வறுவல் மசாலா, மீன் குழம்பு மசாலா, முட்டை குழம்பு மசாலா, மெட்ராஸ் சாம்பார் தூள், ஹோட்டல் சாம்பார் தூள், ரசம் தூள், குழம்பு மிளகாய் மசாலா, இட்லி மிளகாய் பொடி, செட்டிநாடு சிக்கன் பிரியாணி மசாலா, திண்டுக்கல் பிரியாணி மசாலா, ஹைதராபாத் பிரியாணி மசாலா, கரம் மசாலா, சப்ஜி மசாலா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, பாணி பூரி மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பெருங்காயம் என தங்களுடைய தயாரிப்பை ஆச்சி நிறுவனம் விரிவு படுத்தியது.
காலப்போக்கில் ஆச்சி நிறுவனம்.. ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற 3 பெரு நிறுவனமாக உருவெடுத்தது.
Tracxn தரவுகளின்படி, ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.2173 கோடியை எட்டியுள்ளது. அதேபோல நிறுவனத்தின் நிகர லாபம் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.49.38 கோடியாக இருக்கிறது.
2024-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 2 மடங்கு வளர்ச்சியை ஆச்சி நிறுவனம் பதிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவின் முன்னணி FMCG பிராண்டுகளில் ஒன்றாக ஆச்சி மசாலா இயங்கி வருகிறது. சரியான திட்டமிடலுடன்.. வாடிக்கையாளர்களின் தேவையை கண்டறிந்து செயல்பட்டது தான் பத்மசிங் எட்டிய இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications
