இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக இயங்கக்கூடிய குழுமங்கள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன. அப்படி தமிழ்நாட்டில் பல துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரக்கூடிய ஒரு குழுமம் தான் ராம்கோ.
1938 ஆம் ஆண்டு பிஎஸ்சி ராமசாமி ராஜா என்பவரால் தொடங்கப்பட்ட ராம்கோ குழுமம் சிமெண்ட், மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் துணி, நவீன தொழில்நுட்பங்கள் என அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக கால் பதித்து இயங்கி வருகிறது. 1938 ஆம் ஆண்டு ராமசாமி ராஜா, ராஜபாளையம் மில்ஸ் என்ற பெயரில் முதல் தொழிலை தொடங்கினார். 1940 ஆம் ஆண்டு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படக்கூடிய சர்ஜிக்கல் காட்டன் மில்லை தொடங்கினார்.

பின்னர் வி ஆர் ராமசுப்பிரமணிய ராஜாவின் தலைமையின் கீழ் ராம்கோ குழுமம் சிமெண்ட் உற்பத்தி , சாப்ட்வேர் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக மிகப்பெரிய தொழில் குழுமமாக மாற்றம் கண்டது. 1969 ஆம் ஆண்டு தான் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் ஐந்தாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக இந்த நிறுவனம் இருக்கிறது. அதே வேளையில் 1965 ஆம் ஆண்டு ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பைபர் சிமெண்ட் அட்டைகளையும், போர்டுகளையும் தயாரித்து விற்பனை செய்கிறது.
1997 ஆம் ஆண்டு ராம்கோ சிஸ்டம் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த குழுமம் மென்பொருள் துறையிலும் கால் பதித்தது. தற்போது 35க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிறுவனம் சேவை வழங்கி வருகிறது. ராம்கோ குழுமத்தினை பொறுத்தவரை சிமெண்ட், மென்பொருள் என பல்வேறு பிரிவுகளிலும் நீடித்தி நிற்கின்றனர். படிப்படியாக தொழிலை மேம்படுத்தும் இவர்களின் உத்தியே இந்த வெற்றிக்கு காரணம்.
இந்தியா மட்டும் இல்லாமல் இலங்கையிலும் இவர்களுடைய சிமெண்ட், காட்டன் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் இவர்களின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை அமெரிக்கா ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் அலுவலகத்தை நிறுவி ஐடி சேவைகளை வழங்கி வருகிறது.
ராம்கோ குழுமம் தங்களுடைய வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை கீழ் நிலையில் இருக்கும் மக்களின் வளர்ச்சிக்காக வழங்குகிறது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்விக்காக இவர்கள் உதவி செய்திருக்கின்றனர் . மேலும் பழங்குடியின மக்களின் பிள்ளைகள் தங்கி கல்வி பயில்வதற்காக விடுதிகளை நடத்தி வருகின்றனர். தற்போது ராம்கோ குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 3 பில்லியன் டாலர்கள், வருமானம் 1 பில்லியன் டாலர்கள் ஆகும். 15,000க்கும் அதிகமானவரள் இந்த குழுமத்தின் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications