சென்னை: ஜூலை 1ஆம் தேதியான நாளை முதல் ரயில் பயணிகளுக்கு பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்பதில் தொடங்கி டிக்கெட் கட்டணங்கள் உயர்வு வரை நாளை முதல் அமலாகும் மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தட்கல் முன்பதிவில் மாற்றம்: தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவில் முகவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் , தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கும் முதல் 30 நிமிடங்களுக்கு முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.தனிப்பட்ட முறையில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் முதல் 30 நிமிடங்களை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகவர்கள் 30 நிமிடங்கள் முடிந்த பின்பே தட்கல் டிக்கெட் எடுக்க முடியும்.

தட்கல் டிக்கெட் ஆதார் கட்டாயம்: நாளை முதல் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து otp சரிபார்ப்பு நடைமுறையை முடித்த பயணிகளால் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். எனவே நாளை முதல் ஐஆர்சிடிசி கணக்கு வழியாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னதாக தன்னுடைய ஆதார் எண்ணை ஐ ஆர் சி டி சி கனக்குடன் இணைத்து அதனை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பெற்று கேஒய்சி நடைமுறைகளை சரி பார்த்து வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய கணக்கிலிருந்து நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாது .
அதே போல ஜூலை 15ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி கணக்கு வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது டிக்கெட் முன்பதிவு சமயத்தில் பயனரின் ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்க்கப்படும், அதன் பின்னரே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: குறிப்பிட்ட சில ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. 500 கிலோமீட்டருக்குள் பயணம் செய்வார்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 500 கிலோ மீட்டருக்கு மேல் மேற்கொள்ளப்படும் ரயில் பயணங்களுக்கு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து பயணிகள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் . மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத வகுப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கூடுதல் கட்டணமாக வசூல் செய்யப்படும். ஏசி வகுப்புகளின் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளக்கூடிய பயணிகள் ஜூலை 1 முதல் தன்னுடைய ரயில் பயணங்களுக்கு சற்றே அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.
சார்ட் தயாரிக்கும் நேரத்தில் மாற்றம்: தற்போது ரயில் பயணங்களில் முன்பதிவு செய்து இருப்பவர்களுக்கான ரிசர்வேஷன் சார்ட்கள் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு தான் தயார் செய்யப்படுகின்றன. எனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் பயண முடிவை எடுப்பதற்கு மிக குறுகிய காலமே இருக்கிறது. இந்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னரே ரிசர்வேஷன் சார்ட்டுகள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .


Click it and Unblock the Notifications