பண்டிகை காலத்தில் மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்க வேண்டும் , நுகர்வு போக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு அண்மையில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்தது.இது இந்தியர்களுக்கு ஒரு கணிசமான சேமிப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
பரவாயில்லை பணம் சேமிக்க முடிகிறது என மிடில் கிளாஸ் மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி அவர்களுக்கு வந்திருக்கிறது .அதுதான் பழங்களின் விலை உயர்வு. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பழங்கள் விலைவாசி சராசரியாக 13.2% உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது என சொல்லப்படுகிறது .

2023 ஆம் ஆண்டில் இது 3.9% ஆகவும் 2024 ஆம் ஆண்டில் 5.9% ஆகவும் தான் இருந்தது . 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மாதங்களில் காய்கறிகளின் விலை 10.9% குறைந்து இருக்கிறது ஆனால் பழங்களின் விலை 13.2% உயர்ந்திருக்கிறது. ஒரு புறம் சில்லறை பணவீக்கம் குறைந்து இருக்கிறது , ஜிஎஸ்டி வரி குறைப்பினால் மக்களுக்கு பல்வேறு பொருட்களின் விலை குறைந்து சேமிக்க முடிகிறது என பேசி வருகிறோம் ஆனால் சத்தமே இல்லாமல் பழங்களின் விலை உயர்வு மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கிறது.
2024 ஆம் ஆண்டில் முதல் 9 மாத காலத்தில் இந்தியாவில் வாழைப்பழத்தின் விலை உயர்வு சராசரியாக 6 .1 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 8 .1 சதவீதம் என உயர்ந்திருக்கிறது. வாழைப்பழம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வேளாண் செய்யக்கூடிய ஒரு பொருள். ஆனால் ஆந்திரா ,தெலுங்கானா , மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு வாழை உற்பத்தியை பாதித்திருக்கிறது.
இந்த ஆண்டு அதிக மழை பெய்தது பல்வேறு பயிர்களையும் பாதிப்படைய செய்திருக்கிறது, குறிப்பாக வாழை உற்பத்தி சரிந்துள்ளது என வாழை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான டிவி பாட்டில் தெரிவித்திருக்கிறார். அதிக அளவில் வாழைப்பழம் உற்பத்தி செய்யக்கூடிய மாநிலமான பீகாரில் விவசாயிகள் வாழைப்பழத்துக்கு மாற்றாக சோளம் உற்பத்திக்கு மாறிவிட்டனர். இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
ஆப்பிளை பொறுத்த வரை அதன் விலை உயர்வு கடந்த ஆண்டு 10%, இந்த ஆண்டு 12.2% என உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு ஆப்பிள் உற்பத்தியை பாதித்து விலையை உயர்த்தி இருக்கிறது என கூறுகின்றனர். இதே போல பேரிக்காய், லிச்சி உள்ளிட்டவற்றின் விலையும் 13.9% உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications