இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI பால் மற்றும் பால் பொருட்களின் பாக்கெட்டுகளில் புதிய அடையாளத்தை அச்சிடுவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த மாற்றத்தை தெரிந்து கொள்வது அவசியம்.
இந்த புதிய விதிமுறைகள் ஜலை 1, 2028 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதற்குள் பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த விதிமுறைக்கு ஏற்ப பேக்கேஜிங்கை மாற்றியமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய அடையாளம் நீல நிற சதுரப் பின்னணிக்குள் வெள்ளை நிற நீர்த்துளி வடிவத்தை கொண்டிருக்கும்.

பாக்கெட்டுகளில் பால் மற்றும் பால் பொருட்களை எளிதில் அடையாளம் காணவும், அனைத்து பிராண்டுகளிலும் லேபிளிங் ஒரே சீராக இருப்பதை உறுதி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண பால் பாக்கெட்டுகள் மற்றும் இதர பால் பொருட்கள் என அனைத்திலும் இந்த லோகோ இடம்பெற வேண்டும்.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் தயிர் மற்றும் பன்னீர் பாக்கெட்டுகளிலும் இந்த புதிய குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேக்கேஜிங் அளவை பொறுத்து இந்த லோகோவின் குறைந்தபட்ச அளவுகள் FSSAI-ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் பல்பொருள் அங்காடிகள் அல்லது மளிகை கடைகளில் பால் பொருட்களை வாங்கும்போது, அவற்றை எளிதில் அடையாளம் காண இந்த முறை உதவும். பால் மற்றும் பால் பொருட்களின் ஒழுங்குமுறை அடையாளத்தை பொதுமக்கள் தெளிவாக புரிந்துகொள்ள இது வலு சேர்க்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
நுகர்வோர் இந்த லோகோவை அடையாள குறியீடாக மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; வழக்கம்போல் பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் பட்டியலையும் சேர்த்து சரிபார்த்து வாங்குவது அவசியம் என தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்தல்) இரண்டாவது திருத்த ஒழுங்குமுறைகள், 2026இன் படி இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நவம்பர் 9 அன்று அரசாங்க அரதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முன்னதாக 2025ஆம் ஆண்டிலேயே இது குறித்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு, துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில்தான் தற்போது இறுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் இனி எளிதாக பால் மற்றும் பால் பொருட்களை பாக்கெட்டுகளை கண்ட உடனே அடையாளம் காண முடியும்.


Click it and Unblock the Notifications

