சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை என எதையுமே பார்க்காமல் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், துணிமணிகள், உணவுப் பொருட்கள் என அனைத்தையும் வீட்டிற்கு டெலிவரி செய்யக்கூடிய டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் கேப் ட்ரைவர்கள் இணைந்து இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்களுக்கு கிடைக்கும் கமிஷன் குறைந்து விட்டதாகக் கூறி இன்று தற்காலிக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மே 16-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரையில் இந்த சேவை நிறுத்த போராட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிக் ஒர்க்கர்ஸ் என்று சொல்லப்படுகிற தற்காலிக பணியாளர்களுக்கு நிறுவனங்களில் வேலை இல்லை. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிடைப்பது போல இவர்களுக்கு கிராஜுவிட்டி, பிஎப், நிலையான சம்பளம் போன்றவை எல்லாம் கிடையாது. உதாரணத்திற்கு ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா போன்ற தளங்களை எடுத்துக் கொள்ளலாம். இங்கு பணி புரியும் ஊழியர்கள் ஆப் மூலமாக வேலை செய்வார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்தாற் போல் அவர்களுக்கு பணம் கிடைக்கும்.
பிக்சட் சம்பளத்தை விட இது போன்ற ஊழியர்கள் பெரும் சம்பளம், அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்பவே இருக்கும். எனவே இந்த சமயத்தில் ஏறி இருக்கும் பெட்ரோல், டீசல் விலையால் கிக் ஒர்க்கர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக "கிக் மற்றும் பிளாட்பார்ம் சர்வீசஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் (GIPSWU) " ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா போன்ற தளங்களில் பணி புரியும் ஊழியர்களை தற்காலிக போராட்டத்தில் ஈடுபடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக ஊடக தளமான X-இல் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள பதிவில், "விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்றார் போல் சன்மானம் வழங்க வேண்டும். அதற்கு இன்று மதியம் 12 மணி முதல் 5 மணி வரையில் அனைத்து கிக் தொழிலாளர்களும் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டு ஸ்ட்ரைக்கில் ஈடுபடுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்தில் OMC நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்தது. உலக அளவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 70 டாலரில் இருந்து, தற்போது 105 டாலராக ஏறியுள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது,
பெட்ரோல் டீசல் விலையினால் கேப் டிரைவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். "நாள் முழுக்க கார் ஓட்டிவிட்டு, அந்தந்த ஆப் நிறுவனங்களுக்கு கமிஷனையும் வழங்கி விட்டு, மீதமிருக்கும் பணத்தில் பெட்ரோல் போட்டு விட்டால் கடைசியில் கையில் காசே நிற்பதில்லை" என்பதுதான் இன்று பல கேப் டிரைவர்களின் குமுறலாக இருக்கிறது.
சில டிரைவர்கள் எரிபொருள் செலவுகள் அதிகரித்தாலும், அந்தந்த ஆப் நிறுவனங்கள் தங்கள் செலவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்துவதே இல்லை என்று புலம்பத் தொடங்கியுள்ளனர். OMC நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டின் பெருநகரங்கள் முழுவதும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு மத்தியிலும், இன்னமும் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நஷ்டமே ஏற்படுவதாக கிரிஸில் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையில் லிட்டருக்கு 13 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பினால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? என்பதற்கு இதுவே சாட்சி!


Click it and Unblock the Notifications