ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 2 வாரத்தில் 4ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. இதனை அடுத்து உலகின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போனது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டதால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஆசிய நாடுகள் எங்கும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதமே பல மடங்கு உயர்ந்தது.

இந்தியாவில் ஷெல், நயாரா போன்ற தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் விலைகளை உயர்த்தின. ஆனால் ஹெச்பி, பாரத் பெட்ரோலிய, இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இரண்டரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமலேயே இருந்தன. இதனால் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையிலும் 20 ரூபாய்க்கும் மேல் நஷ்டம் அடைந்தன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி மக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அதிகளவில் பேருந்து , ரயில்களை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே நஷ்டம் அதிகரித்ததால் நாடு முழுவதும் முதன்முறையாக மே 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.14 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.11 ரூபாயும் அதிகரித்தன. ஈரான் போர் சூழல் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததால் பால், பிரெட் என பல பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மே 19ஆம் தேதி 2வது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரித்தன. இத்துடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் மே 23ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.81 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4.93 ரூபாயும் விலை உயர்ந்தன. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மீண்டும் இன்று ஒரு முறை பெட்ரோல் , டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. காலையிலேயே அதிர்ச்சியான தகவலாக இது வந்து சேர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் 2.57 ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ஆவது முறையாக உயர்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆக விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக விற்பனையாகிறது. அதாவது ஈரான் போர் தொடங்கிய பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.27 ரூபாயும், டீசல் விலை 7.50 ரூபாயும் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால், காய்கறி, வாடகை கார், வாடகை ஆட்டோ, ஸ்விக்கி, சோமேட்டோ ஆர்டர் என பலவற்றுக்கும் இனி நாம் கூடுதலாக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications

