சமீபத்தில் உலகளாவிய ஆய்வு நிறுவனமாக விளங்கும் கேலப், "ஸ்டேட் ஆஃப் தி குளோபல் வொர்க் பிளேஸ் 2025" என்ற ரிப்போர்ட்டை வெளியிட்டது. இந்த அறிக்கையில் உலகெங்கிலும் உள்ள பணியாளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பணியிடச் சூழல் எப்படி இருக்கிறது? எனப் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதில் தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் பிற பகுதிகளில் பணி புரியும் ஊழியர்களை விட ஈடுபாடின்றி.. தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமின்றி இருப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
கேலப் நிறுவனம் இந்த அறிக்கையை ஊழியர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் பணியிட அனுபவத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகளாவிய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். அதோடு அவ்வப்போது கருத்துக் கணிப்புகள் மற்றும் பணியிட ஆராய்ச்சிக்கு பிரபலமான நிறுவனமாகவும் உள்ளது. குளோபல் வொர்க் பிளேஸ் அறிக்கையை கேலப் நிறுவனம் வருடா வருடம் வெளியிடும். இது உலகெங்கிலும் உள்ள ஊழியர்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையைப் பற்றி எப்படி உணர்கின்றனர் என்பது குறித்த முக்கியமான தகவல்களை வழங்கும்.

ஊழியர் ஈடுபாடு என்றால் என்ன?: ஊழியர் ஈடுபாடு என்பது ஒரு ஊழியர் பணியிடத்தில் வேலை செய்யும் போது காண்பிக்கும் ஈடுபாடு மற்றும் உற்சாகத்தை குறிக்கிறது. உதாரணமாக ஒரு ஊழியரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் போது அந்த ஊழியர் ஈடுபாட்டுடன் பணிபுரிவார். இதனால் தாமாக முன்வந்து நிறுவனங்களுக்கு ஏதுவாக பணிபுரிவது, நிறுவனத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளை சொந்தமாக நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபாடு காட்டுவார் என்றும் அறிக்கை விளக்குகிறது.
இப்படி பலவற்றையும் கணக்கிட்டு தான் இந்த அறிக்கை வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் குறிப்பாக மேனேஜர் லெவலில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையுடனும் நிறுவனத்துடனும் அதற்கு முன்பு இருந்ததை விட தொடர்பில்லாதவர்களாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். அதற்கு ஏதுவாக 2024-ஆம் ஆண்டில் பணியில் ஊழியர்களின் ஈடுபாட்டு சதவீதம் கணிசமாக குறைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023-ஆம் ஆண்டில் 23 சதவீதமாக இருந்த ஊழியர் ஈடுபாடு.. 2024-ஆம் ஆண்டில் 21 சதவீதமாக சரிந்தது. இந்த 2 சதவீத சரிவு சிறியதாக தோன்றினாலும் இதன் விளைவுகள் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஏனெனில் கேலப் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இந்த 2 சதவீத ஊழியர் ஈடுபாடு குறைவால் உலக பொருளாதாரத்திற்கு 438 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்த ஊழியர் ஈடுபாட்டு விகிதம் 30 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இது 33 சதவீதமாக இருந்தது. அதேபோல தினசரி அடிப்படையில் மன அழுத்தம் மற்றும் கோபத்தை தாங்கிக்கொண்டு பணிபுரியும் ஊழியர்களின் சதவீதமும் இந்தியாவில் அதிகமாக உள்ளது.
கருத்துக்கணிப்புகளில் பங்கேற்றவர்களில் 30 சதவீதம் பேர் தினசரி மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். சீனாவில் 18 சதவீதமும், உலகின் மகிழ்ச்சியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்ட பின்லாந்தில் 6 சதவீதத்தினரும் கோபத்தை பொறுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதோடு இந்திய ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தொடர்ந்து புதிய வேலைவாய்ப்புகளைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும், அவர்களின் தற்போதைய பணிகளில் அதிருப்தி இருப்பதாகவும் கேலப் அறிக்கை கண்டறிந்துள்ளது.


Click it and Unblock the Notifications