பெங்களூரு: பொதுவாக கூகுள் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள் எல்லாம் ஊழியர்கள் உற்சாகமாக வந்து வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. அவ்வப்போது இத்தகைய அலுவலக வீடியோக்கள் வெளியாகி நம்மை ஏங்க வைத்து விடும். அப்படி லிங்குடின் தளத்தின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
தொழில் ரீதியான தொடர்புகளுக்கும், வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் உதவும் ஒரு தளம் தான் லிங்குடின். சர்வதேச அளவில் கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புக்காகவும் வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவும் இந்த தளத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூருவில் லிங்குடின் நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.
ரௌனக் என்பவர் அண்மையில் லிங்குடின் இந்தியாவின் பெங்களூரு அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார். பெங்களூருவில் உள்ள இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே இது போன்ற சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள் பல்வேறு பிரத்தியேக அம்சங்களோடு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் லிங்குடின் அலுவலகத்தை பொருத்தவரை மிகவும் கிரியேட்டிமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருப்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது.
குறிப்பாக மீட்டிங் ரூம்களுக்கு எல்லாம் வித்தியாசமான முறையில் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்திய இனிப்பு வகைகளான காஜு கத்லி, குலோப் ஜாமுன் என்பன உள்ளிட்டவற்றை கொண்டு மீட்டிங் ரூம்களுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர். மேலும் மீட்டிங் ரூம்கள் என்றால் வழக்கமான அறைகளாக இல்லாமல் ஊழியர்களுக்கு ஒரு புதுமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முறையில் பெயர் சூட்டி இருப்பது தெரிய வருகிறது.
மேலும் இங்கே ஊழியர்கள் வேலை போக மீதமுள்ள நேரத்தில் அல்லது தங்களை வேலை சார்ந்த அழுத்தங்களிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக பல்வேறு ஆக்டிவிட்டிகளை மேற்கொள்வதற்கான அறைகளும் நிறுவப்பட்டுள்ளன.
குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவதற்கு என தனி அறை இங்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பல விளையாட்டுகளுக்கான அறை, மியூசிக் ரூம் உள்ளிட்டவை இந்த அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்களுடைய இடைவேளை நேரங்களில் இங்கே சென்று ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி இங்கே ஊழியர்களுக்கு பிரத்தேகமான ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் ஊழியர்கள் புத்தகங்களை வாங்கி நன்கொடையாக வழங்கலாம்.
லிங்குடின் அலுவலகம் தொடர்பான இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளன. ஒரு பயனர் இப்படி ஒரு அலுவலகம் இருந்தால் தினமும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் நீடித்து நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளார். மற்றொருவர் அலுவலகம் கிரியேட்டிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இது கனவு அலுவலகம் என பலரும் கூறியுள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications