நீண்டதூர பயணம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதுபோக்கிற்காக செல்லும் சுற்றுலா பயணம் எனில் சொல்லவே வேண்டாம். அதுவும் சொகுசு கப்பலில் பயணம் எனில் நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறதல்லவா?
அதிலும் நீங்கள் ஒரு பயண பிரியர் எனில் நிச்சயம் இது உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
அப்படி ஒரு பிரம்மாண்ட திட்டத்தினை அரசு திட்டமிட்டுள்ளது. அது கங்கா விலாஸ் கப்பல் பயணத்தின் மூலம் 52 நாட்களில் 27 நதிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்களையும் பார்க்கலாம். இதன் மூலம் மிக பிரபலமான பல இடங்களையும் நீங்கள் சுற்றி பார்க்க முடியும்.
மிக நீண்ட கப்பல்
ஆற்றில் பயணிக்க கூடிய சொகுசு கப்பல்களில் உலகிலேயே மிக நீண்ட கப்பல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது வரவிருக்கும் ஜனவரி மாதம் முதல் அதன் அழகான பயண சேவையை செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4,000 கிலோமீட்டர்கள் பயணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு பயணம்?
கங்கா விலாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பயணத்தை தொடங்கி, அசாம் மாநிலத்தின் திப்ருகரில் முடிவடைகிறது. இது கொல்கத்தா தாகா வழியாக தனது பயணத்தை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை அழகையும் ரசிக்கலாம்
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்த கப்பல் இந்தியாவின் இயற்கை அழகை மக்கள் ரசித்தவாறே செல்வதற்கு ஏற்றது. மக்கள் வனவிலங்குகள் போன்றவற்றையும் ரசித்தவாறே செல்ல தேசிய சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் வழியாகவும் பயணிக்கிறது. இதில் குறிப்பாக சுந்தரவனக் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் காசிரங்கா தேசிய பூங்காவினையும் பார்த்து ரசிக்க முடியும்.
பல்வேறு கலாச்சாரங்கள்
அது மட்டும் அல்ல உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகளில் ஒன்றான கங்கா ஆர்த்தி மற்றும் மாயோங் போன்ற இடங்களையும் இந்த பயணத்தில் கண்டு ரசிக்கலாம். மொத்தத்தில் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் இதன் மூலம் கண்டுகளிக்க முடியும். இது தவிர ஆற்றுத் தீவான மாஜூலியையும் கண்டு ரசிக்க முடியும்.
எப்போது தொடக்கம்?
ஜனவரி 10 முதல் இதன் சேவை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மார்ச் 1ம் தேதி இதன் பயணம் முடிவடையுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வங்காளத்தில் 1100 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இயக்கம்?
இந்த கப்பல் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI), அன்டாரா சொகுசு நதி கப்பல்கள் மற்றும் ஜேஎம் பாக்ஸி ரிவர் குரூப் ஆகியவற்றால் பிபிபி (PPP) மாதிரியின் கீழ் இயக்கப்படும்.
கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் இரு நாடுகளையும் இணைக்கும் வர்த்தக மற்றும் போகுவரத்து வழித்தடங்களை, ஏற்கனவே திறந்துவிட்ட இந்தோ- வங்காள தேச நெறிமுறை பாதையின் கீழ் இது சாத்தியமாகும்.
என்னென்ன வசதிகள்?
இந்த கங்கா விலாஸ் கப்பலில் எல்இடி டிவி, ஸ்மோக் டிடெக்டர்கள், லைஃப் வெஸ்ட்கள், ஸ்பிரிங்லர்கள், பிரெஞ்ச் பால்கனி, மாற்றத்தக்க படுக்கை வசதிகள், 40 இருக்கைகள் கொண்ட உணவகம், ஸ்பா மற்றும் சன்டெக்ஸ் உள்ளிட்ட 18 அறைகள் மற்றும் பிற வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் எவ்வளவு?
விரைவில் செயல்பாட்டுக்கு வரும் இந்த கப்பலில் பயணிக்க கட்டணம் என்பது ஒவ்வொரு பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு விதிக்கப்படலாம் என தெரிகிறது. இதில் அதிகபட்சமாக 4.37 லட்சம் ரூபாய்க்கு மேலாக விதிக்கப்படுகிறது. எனினும் மொத்த பயணத்திற்கும் எவ்வளவு கட்டணம்? மற்ற செயல் முறைகள் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தால் தான் தெரியவரும்.


Click it and Unblock the Notifications