அமெரிக்கா அரசாங்கம் இஸ்ரேலோடு சேர்ந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி திடீரென ஈரான் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தது. பதிலுக்கு ஈரானும் போர் தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஈரான் போர் நீடிக்கிறது. போரின் முதல் ஒரு மாத காலத்தில் மிகத் தீவிரமாக அமெரிக்க படைகள் ஈரானின் பல்வேறு இடங்கள் மீதும் குண்டு மழைகளை பொழிந்தன.
ஈரான் போர் அமெரிக்கா அரசுக்கு தேவையற்ற செலவு என உள்நாட்டிலேயே மக்கள் டிரம்பின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். டிரம்புக்கு சொந்தமான குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கூட ஈரான் போர் தேவையற்ற செலவுகளை கொண்டு வருவதாக கூறுகின்றனர். மக்களிடையிலும் டிரம்ப் மீதான செல்வாக்கு என்பது குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ஈரான் போர் அமெரிக்க நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஒரு நிதி சுமையை ஏற்படுத்தி தந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஈரான் போர் தொடங்கிய பிறகு அமெரிக்காவில் Gasoline எனப்படும் வாகன எரிபொருட்களின் விலை 50% உயர்ந்திருக்கிறதாம். ஒரு கேலன் வாகன எரிபொருள் விலை சராசரியாக 4.4 டாலரில் இருந்து 4.5 டாலர்கள் வரை உயர்வு கண்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து சந்தைக்கு இரண்டு மாதங்களாக கச்சா எண்ணெய் வரவில்லை. இதனால் ஆசிய நாடுகளில் கடுமையான பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இதன் தாக்கம் அமெரிக்க சந்தையிலும் எதிரொலிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலர்களுக்கு மேலாகவே தொடர்ந்து ஒரு மாத காலமாக இருந்து வருகிறது. இது அமெரிக்க சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் சந்தையில் அழுத்தம் அதிகரிக்கிறது அதனால் விற்பனை விலை உயர்கிறது என கூறுகின்றனர் அமெரிக்காவை சேர்ந்த எரிபொருள் விற்பனை நிறுவனங்கள். தற்போதைக்கு இந்த போர் முடிவுக்கு வந்தாலும் கச்சா எண்ணெய் பிரச்சனை தீர்வதற்கு இன்னும் பல மாதங்கள் தேவைப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை வாகன எரிபொருட்களின் விலை உயர்வு ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டதாம். உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்துவிட்டன, போக்குவரத்து செலவுகள் அதிகமாகிவிட்டன. பல்வேறு பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக் செலவுகள் உயர்ந்து அவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே இதன் தாக்கத்தை அமெரிக்க மக்கள் தற்போது படிப்படியாக உணர தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பாசிடிவான சிக்னல்கள் தென்பட தொடங்கியுள்ளன. அதாவது அமெரிக்கா ஈரான் தரப்பு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒரு உடன்பாடுக்கு வர ஒப்பு கொண்டிருக்கின்றன. எனவே இனி வரும் நாட்களில் பதற்றம் தணிந்து கச்சா எண்ணெய் சப்ளை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

