இந்திய சந்தையில் தொடர்ந்து பல்வேறு துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் கௌதம் அதானி சமீபத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் கட்டுமான துறையைக் குறிவைத்துச் சிமெண்ட் உற்பத்தி துறையில் களமிறங்கினார்.
இதற்காகப் பெரும் தொகையை முதலீடு செய்து இந்தியாவில் இரு முக்கியச் சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தை வெளிநாட்டு நிறுவனமான ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து முழுமையாகக் கைப்பற்றியது.
இதன் மூலம் இந்தியாவின் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உயர்ந்துள்ள அதானி குழுமம் தற்போது மீண்டும் ஒரு சிமெண்ட் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது அதானி குழுமம்.
கௌதம் அதானி
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், உலகின் 4வது பெரிய பணக்காரராகவும் விளங்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குரூப் ஏற்கனவே 2 சிமெண்ட் நிறுவனத்தை வாங்கியுள்ள நிலையில் 3வதாக ஒரு சிமெண்ட் நிறுவனத்தை வாங்க ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ்
ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் சிமெண்ட் பிரிவை மொத்தமாக வாங்குவதற்காக அதானி குரூப் பேச்சுவார்த்தை துவங்கி இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்திடம் சிமெண்ட் கிரைடர் யூனிட் மற்றும் இதர முக்கியமான சிமெண்ட் கட்டமைப்புகளும் உள்ளது.
5000 கோடி ரூபாய்
இதைக் கைப்பற்றுவதன் மூலம் உற்பத்தியை வேகமாக அதிகரிக்க முடியும் என்பது அதானி குரூப்-ன் இத்திட்டம், ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனத்தின் சிமெண்ட் பிரிவை கைப்பற்ற சுமார் 606 மில்லியன் டாலர் அதாவது 5000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அம்புஜா சிமெண்ட் அல்லது ACC சிமெண்ட்
மேலும் இந்தக் கைப்பற்றலை அம்புஜா சிமெண்ட் அல்லது ACC சிமெண்ட் நிறுவனத்தின் வாயிலாகச் செய்ய அதானி குரூப் திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்பிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே கடன் நெருக்கடியில் இருப்பது முக்கியமான விஷயம்.
சிமெண்ட் உற்பத்தித் திறன்
மத்திய பிரதேசம் மாநிலத்தின் நைகிரி பகுதியில் அமைந்திருக்கும் இந்தச் சிமெண்ட் கிரைன்டிங் ஆலை ஆண்டுக்கு 2 மில்லியன் டன் சிமெண்ட்-ஐ உற்பத்தி செய்கிறது. 2014 முதல் இந்த ஆலை இயங்கி வரும் நிலையில் அதானி குழுமத்தின் 67.5 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி திறனை மேம்படுத்த உதவும்.
முதல் இடம்
இதன் மூலம் இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை முந்தி முதல் இடத்தைப் பிடிக்க அதானி குரூப்-ன் தலைவர் கௌதம் அதானி ஆர்வமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications