இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கௌதம் அதானி கடந்த ஒரு வாரத்தில் அதாவது 7 நாளில் மட்டும் தனது நிகரச் சொத்து மதிப்பில் 10 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. மேலும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 10 நாட்களுக்கு முன்னர் 23-25 வது இடத்தில் இருந்தார்.
ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 10 பில்லியன் டாலர் அளவில் சொத்து மதிப்பு உயர்ந்தது மூலம் தற்போது உலகின் 16வது பெரும் பணக்காரராக உள்ளார் என ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் காட்டுகிறது. மேலும் இப்பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் இப்போது 70.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது.

கௌதம் அதானிக்குப் போட்டியாகச் சுமார் 90.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 13வது இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. இதன் மூலம் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்-ன் டாப் 20 பேர் கொண்ட பட்டியலில் இருக்கும் இரண்டாவது இந்தியர் ஆவார்.
செவ்வாயன்று, அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் (DFC) சமீபத்தில் தான் இலங்கையில் துறைமுகம் அமைப்பதற்கான அதானி போர்ட் நிறுவனத்திற்கு 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியைக் கொடுத்தது.
இந்த நிலையில் அமெரிக்கச் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்வைத்த அனைத்து கார்ப்பரேட் மோசடி குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றது என்பதைக் கண்டறிந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளில் அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்திற்குத் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்த காரணத்தால் மட்டுமே கடன் கொடுக்கப்பட்டது என அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக இன்று அதானி குழுமத்தின் அனைத்து 10 நிறுவனங்களும் இரண்டாவது வாரமாகத் தொடர் உயர்வுடன் செயல்படுகிறது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளின் நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் - 17.03 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் & SEZ - 15.15 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 15.91 சதவீதம் உயர்வு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 20.00 சதவீதம் உயர்வு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
அதானி கிரீன் எனர்ஜி - 20.00 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 19.95 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 9.93 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 8.20 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 7.22 சதவீதம் உயர்வு
NDTV - 18.41 சதவீதம் உயர்வு


Click it and Unblock the Notifications