இந்தியாவில் தற்போது Work life Balance எனப்படும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலையை சமன் செய்ய வேண்டும் என்ற கருத்தாக்கம் மிக வலுவாக முன் வைக்கப்படுகிறது.
எப்பொழுதும் வேலை என்றே இருக்காமல் தனிப்பட்ட வாழ்க்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும், ஊழியர்களுக்கு அதற்கான இடத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன. இதற்கு ஆதரவான கருத்தை அதானி குழும தலைவர் கௌதம் அதானியும் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி இந்த இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என தெரிவித்திருந்தார். அந்த கருத்து இன்று வரை மிகப்பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது. பலர் நாராயண மூர்த்தியின் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என்ற கருத்துக்கு கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஒரு ஊழியர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலையையும் சமன்படுத்த முடியாத சூழல் உண்டாகும். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்களுடைய உடல் நலனிலும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தொடர்ந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் புகழ்பெற்ற அதானி குழுமத்தின் தலைவருமான கௌதம் அதானி 70 மணி நேரம் வேலை மற்றும் வொர்க் லைஃப் பேலன்ஸ் குறித்த தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மையின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கும் கௌதம் அதானி, ”என்னுடைய வொர்க் லைஃப் பேலன்ஸை உங்கள் மீது நான் திணிக்க முடியாது, அதேபோல உங்களுடைய வொர்க் லைஃப் பேலன்ஸை என் மீது திணிக்க முடியாது என கூறியுள்ளார்.
சிலர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் குடும்பத்தினருடன் இருந்தாலே மனநிறைவு பெறுவார்கள், சிலர் 8 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் மனநிறைவு பெறுவார்கள். அதனையும் மீறி நீங்கள் வீட்டில் நேரத்தை கழித்தால் உங்கள் மனைவி பிரிந்து சென்றுவிடுவார். எனவே வொர்க் லைஃப் பேலன்ஸ் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் எனக் கூறியுள்ளார்.
உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்யும் போது தான் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் சமநிலை பெறும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குடும்பமும் வேலையும் தான் உலகம். எனவே ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் வொர்க் லைஃப் பேலன்ஸை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். நம்முடைய குழந்தைகள் நம்மை கவனிக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அதானி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு நாம் யாரும் நிரந்தரமாக இருக்க போவதில்லை, நாம் வாழ்க்கையை புரிந்து கொண்டால் அனைத்துமே எளிமையானதாகிவிடும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications