சென்னை: இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதைத் தாண்டி போட்டி நிறுவனங்களையும், இத்துறை சார்ந்த நிறுவனங்களையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்ஸார் டிரான்ஸ்கோ லிமிடெட் (Essar Transco) நிறுவனத்தை ₹1,900 கோடி நிறுவன மதிப்புக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்விரு நிறுவனங்கள் ஜூன் 2022 இல் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. Essar Transco மத்தியப் பிரதேசத்தில் உள்ள மஹான் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சிபாட் பூலிங் சப்ஸ்டேஷன் இணைக்கும் 400 kV, 673 சுற்று கிமீ டிரான்ஸ்மிஷன் லைனை கொண்டு உள்ளது.
அதானி குழுமம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும் வர்த்தகத்தை வைத்துள்ளது. இதை தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் விதமாக முதலீட்டையும், நிறுவன கைப்பற்றல்களையும் செய்து வருகிறது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்-க்கு சொந்தமான துணை நிறுவனமான அதானி டிரான்ஸ்மிஷன் ஸ்டெப் டூ லிமிடெட் (ATSTL) நிறுவனம் தான் Essar Transco-வை கையகப்படுத்தியது. இந்த கைப்பற்றல் நடவடிக்கையை முழுமையாக முடிக்கப்பட்டு தற்போது அதானி டிரான்ஸ்மிஷன் ஸ்டெப் டூ நிறுவனத்தின் கிளை நிறுவனமாக Essar Transco உள்ளது.
Essar Transco கையகப்படுத்துதலின் மூலம், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நெட்வொர்க் 21,182 சர்கியூட் கிலோமீட்டராக உயர்ந்துள்ளது, அதில் 18,109 சர்கியூட் கிலோமீட்டர் செயல்பாட்டிலும் 3,073 சர்கியூட் கிலோமீட்டர் கட்டுமானத்தில் பல்வேறு கட்டங்களில் உள்ளது என்றும் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications