இந்தியா உற்பத்தி துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குக் கப்பல் போக்குவரத்து மிகவும் முக்கியமாகும். ஆனால் சந்தையில் ஏற்கனவே சரக்கு கப்பல்களுக்கு அதிகப்படியான தட்டுப்பாடு நிலவுகிறது.
இதேவேளையில் உலகளவில் முன்னணி கப்பல் கட்டும் தளங்கள் அனைத்திலும் 2028ஆம் ஆண்டு வரை கப்பல் கட்டுமானத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கப்பல் உரிமையாளர்கள் புதிய கப்பல்களை கட்டுவதற்கான மாற்று உற்பத்தி தளங்களைத் தேடி வருகின்றனர்.

இதேபோன்ற சூழ்நிலையில் கொரோனா காலத்தில் கண்டைனர் தட்டுப்பாடு ஏற்பட்டது, அப்போது சீனா சில மாதங்களில் பல ஆயிரம் கண்டைனர்களை தயாரிக்கும் கட்டமைப்பை உருவாக்கி பெரும் வர்த்தகத்தைப் பார்த்தது. தற்போது இதே பார்மூலா-வை அதானி குழுமம் கப்பல் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்துகிறது
இந்திய தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லவும், சர்வதேச சந்தையில் சரக்கு கப்பல்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டையும் சரி செய்ய அதானி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது. இதற்காக இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான முந்திராவில், அதானி குழுமம் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
முந்திரா துறைமுகம் ஏற்கனவே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில், இதே பகுதியில் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளார் கௌதம் அதானி. திடீரென கப்பல் கட்டுமானதில் அதானி குழுமம் இறங்க மற்றொரு முக்கிய காரணமும் உண்டு.
உலகளவில் தற்போது இயங்கி வரும் கப்பல்கள் பசுமை கப்பல்களாக (Green Ships) மாறி வரும் முக்கியமான கட்டத்தில், புதிய கப்பல்களுக்கும், மறுசீரமைப்பு பணிகளுக்குமான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதை குறிவைத்து அதானி குழுமம் இத்துறையில் களமிறங்கியுள்ளது. அதானி குழுமத்தின் இந்த முயற்சி இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பை தேடித்தரும். அடுத்த 30 ஆண்டுகளில், தற்போதைய கப்பல்களை மாற்றுவதற்குக் குறைந்தது 50,000 கப்பல்கள் கட்டப்பட வேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இத்துறையில் பெரும் வாய்ப்பு இருப்பது உறுதி.
இந்தியாவின் மொத்த வணிக கப்பல் கட்டுமான சந்தையின் மதிப்பு 2047 ஆம் ஆண்டில் சுமார் 62 பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், மத்திய துறைமுகம், கடல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தால் ஜூலை 4 ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில் KMPG தெரிவித்துள்ளது.
இந்தியாவை 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் டாப் 10 கப்பல் கட்டுமான நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கான Maritime India Vision 2030 திட்டத்தில், அதானி குழுமத்தின் முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. Maritime India Vision 2030 திட்ட இலக்குகள் அடைந்தால் 2047 ஆம் ஆண்டுக்குள் டாப் 5 இடங்களுக்குள் இந்தியா வருவது மட்டும் அல்லாமல் Maritime பிரிவில் இந்தியா சுயசார்பு நிலையை அடையும்.
தற்போது, சர்வதேச வணிக கப்பல் கட்டுமான சந்தையில் இந்தியா 20 ஆவது இடத்தில் உள்ளது, மேலும் மொத்த சந்தையில் வெறும் 0.05% என்ற அளவில் மிகவும் சொற்ப பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது. இந்திய உரிமையாளர்கள் மற்றும் இந்தியாவுக்கு சொந்தமாக இயங்கும் சரக்கு கப்பல்களில் உலகளவில் வெறும் 5 சதவீத பங்கீட்டை மட்டுமே கொண்டுள்ளது.
அதானி குழுமத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த கப்பல் கட்டுமான திட்டம், 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரா துறைமுக விரிவாக்கத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் மற்றும் coastal regulation zone அனுமதி சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது என மே 15 ஆம் தேதி திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் EAC கூட்டத்தின் குறிப்புகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில் தான் நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளம் உள்ளது, இது இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ லிமிடெட் மூலம் நடத்தப்படுகிறது. இப்படி இந்தியா முழுவதும் எட்டு அரசுக்கு சொந்தமான ஷிப்யார்டுகள் மற்றும் 20 தனியார் ஷிப்யார்டுகள் உள்ளது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் தவிர, மற்ற அரசுக்கு சொந்தமான ஷிப்யார்டுகள் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவி உடன் இயங்குவதால் கடற்படைக்கு தேவையான கப்பல்களை மட்டுமே தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications