இந்தியாவின் 2வது பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி-யின் அதானி குழுமம், செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் பெரும் பகுதி பங்குகளை அறிவிக்கப்படாத தொகைக்கு வாங்கியுள்ளது. முகேஷ் அம்பானி ஒருபக்கம் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு இருக்கும் வேளையில் கௌதம் அதானி பிரபலமான நியூஸ் ஏஜென்சியான IANS-ன் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளார்.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிகையில், அதானி குழுமத்தின் மீடியா வர்த்தகத்தையும், முதலீட்டு பிரிவான துணை நிறுவனமான AMG Media Networks Ltd, ஐஏஎன்எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

டிசம்பர் 15 ஆம் தேதி AMG Media, ஐஏஎன்எஸ் பங்குகளைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, இதே நாளில் தான் ஐஏஎன்எஸ் நிர்வாகக் குழு பங்குகளை வாங்குவது குறித்து ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம் AMG Media Networks மற்றும் IANS பங்குதாரர் சந்தீப் பம்சாய் மத்தியில் நடந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு குறித்து வெளியிடவில்லை, ஆனால் பங்கு கைப்பற்றல் செலவு பரிவில் 5,10,000 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
BQ Prime தளத்தை இயக்கும் Quintillion Business Media ஐ வாங்கியது மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதானி குழுமம் மீடியா வர்த்தகத் துறைக்குள் நுழைந்தது. அதன் பிறகு 2022 டிசம்பர் மாதம் NDTV நிறுவனத்தில் கிட்டத்தட்ட 65 சதவீதப் பங்குகளைப் கைப்பற்றியது. இந்தக் கையகப்படுத்துதல்-ம் AMG Media வாயிலாகத் தான் நடந்தது.
2022-23 நிதியாண்டில் IANS ரூ.11.86 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது IANS நிறுவனத்தில் 50.50 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது மூலம் AMG Media இதன் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு அதிகாரத்தைப் பெறுகிறது. மேலும் இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்-ன் கிளை நிறுவனமாக மாற உள்ளது IANS.
வியாழக்கிழமை சென்னையில் இருக்கும் அதானி எண்ணூர் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் (ஏஇசிடிபிஎல்) நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, உலகளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகச் சரக்குக் கையாளுதலில் முன்னோடியாக இருக்கும் MSC எனப்படும் பிரபலமாக அழைக்கப்படும் மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனியின் Mundi எனப்படும் கிளை நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகளை 247 கோடி ரூபாய்க்கு கைப்பற்றுகிறது.
அதானி குழும நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதாவது முதல் 6 மாத முடிவில் ரொக்க கையிருப்புத் தொகை 13.7 சதவீதம் உயர்ந்து 45,895 கோடி ரூபாயாக இருப்பதாக அறிவித்துள்ளது. இதை தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக பயன்படுத்த துவங்கியுள்ளதை IANS நிறுவனத்தில் 50.50 சதவீத பங்குகளைக் கைப்பற்றல் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
மேலும் அதானி குழுமம் அடுத்த 10 வருடத்தில் 7 லட்சம் கோடி ரூபாயே முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications