அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, கடனைக் குறைக்கும் நோக்கில் புதிதாக 4.5 பில்லியன் முதலீட்டில் சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து ஆம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்களையும் அதன் தொழிற்சாலைகளை கைப்பற்றி சிமெண்ட் வணிகத்தில் இறங்கியது.
அதானி குழுமம் ஏற்கனவே கட்டமான துறையில் அசத்தி வரும் வேளையில் சிமெண்ட் துறையில் இறங்கியதன் மூலம் இத்துறையில் 2வது அதிக உற்பத்தி திறன் கொண்ட கட்டமைப்பை வைத்துக்கொண்டு இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் பின்பு தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாகி அதானி குழும பங்குகளை பெரும் வீழ்ச்சிக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் அதானி குழுமம் தனது கடன் சுமையை குறைப்பதற்காக சிமெண்ட் பிரிவில் சுமார் 450 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்புஜா சிமெண்ட்
அதானி நிறுவனம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் 4 - 5 சதவீத பங்குகளை சர்வதேச கடன் வழங்குனர்களுக்கு விற்க உள்ளது என்று தனக்கு கிடைத்த தகவல்களை வைத்து பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
ஹோல்சிம் நிறுவனம்
இதேவேளையில் சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து ஆம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்களை வாங்க அதானி குழுமம் சர்வதேச நிறுவனங்களிடம் 4.5 பில்லியன் டாலர் அளவிலான கடனை பெற்றது. இக்கடனின் தவணையை மார்ச் மாதம் செலுத்த வேண்டும்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
அமெரிக்காவின் பிரபலமான ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் செய்த குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வர GQG பார்ட்னர்ஸ்-யிடம் புதிய முதலீடுகளை பெற்று முதலீட்டாளர்களிடம் மீண்டும் முதலீடுகளை பெற துவங்கியுள்ளது. ஆனால் பெரு முதலீட்டாளர்கள் கடன் அளவை முக்கியமான பிரச்சனையாக பார்க்கும் நிலையில் தற்போது அம்புஜா சிமெண்ட் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
500 மில்லியன் டாலர் - பிரிட்ஜ் கடனை
இந்த வார தொடக்கத்தில், அதானி குழுமம் மார்ச் 9 அன்று செலுத்த வேண்டிய 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரிட்ஜ் கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாக தகவல் வெளியானது. அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 0.99% பங்குகள் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் கடனுக்கு உத்தரவாதமாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக எஸ்பிஐகேப் டிரஸ்டி பங்குச்சந்தையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
GQG Partners முதலீடு
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஆஸ்திரேலிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதலீட்டு அலோசனை வழங்கும் GQG Partners Inc நிறுவனம் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் 3.4 சதவீத பங்குகளும், அதானி போர்ட்ஸ் & SEZ 4.1 சதவீத பங்குகளும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகள் என மொத்தம் 21 கோடி பங்குகளை சுமார் 15,446 கோடி ரூபாய்க்கு வாங்கிய பின்பு தொடர் வளர்ச்சியில் உள்ளது அதானி பங்குகள்.
மறு முதலீடு
இந்த நிலையில் மார்ச் 8 ஆம் தேதி GQG Partners அதானி குழுமத்தில் தனது முதலீட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்ட முதலீடுகளுக்காக ராஜீவ் ஜெயின் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்த வாரம் முதலீட்டாளர்கள் உடன் பேச உள்ளார். ராஜீவ் ஜெயின் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பென்ஷன் பண்ட் நிறுவனத்துடன் பேச உள்ளார்.


Click it and Unblock the Notifications