நீ என்ன பெரிய பணக்காரனா என்பதை இந்தியர்கள் நீ என்ன டாடாவா, பிர்லாவா என கேட்ட காலம் போய் நீ என்ன அதானியா , அம்பானியா என கேட்கும் காலம் வந்துள்ளது. இந்தியாவில் பணக்காரர் என்றாலும் பெரும் தொழில் அதிபர்கள் என்றாலும் சட்டென மனதில் தோன்றும் பெயர்கள் அதானியும் அம்பானியும் தான்.
பெட்ரோ கெமிக்கல் ,ஃபேஷன், மீடியா, தொலைதொடர்பு என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக தொழில் புரிந்து வருகிறது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம். அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தார். முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக மட்டும் அல்ல ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்திலும் இருந்து வந்தார். இந்நிலையில் அதானி குழும தலைவர் கெளதம் அதானி , முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்த முதலிடத்தை பிடித்து விட்டார்.

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் பில்லியினியர்கள் பட்டியல் தரவுகளின் படி, அதானி குழும தலைவர் கௌதம் அதானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மற்றும் சாஃப்ட்பேங்க் (SoftBank) சிஇஓ மசாயோஷி சன் (Masayoshi Son) ஆகியோரை முந்தி, மீண்டும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.5 பில்லியன் அதாவது சுமார் 21,000 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் மட்டும் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $10 பில்லியன் அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 89.2 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 7.46 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் உலக அளவில் 23ஆவது பெரிய பணக்காரராகவும் மாறியுள்ளார்.
அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் விதித்திருந்த மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கடந்த மாதம் அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்தது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு வேகமாக உயர தொடங்கியது. இதனால் இவரது சொத்து மதிப்பு 3 வாரத்திலேயே பெரிய உயர்வு கண்டுள்ளது.
3 வாரத்தில் அதானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 10 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு நிமிடமும் 3 கோடி ரூபாய்க்கு மேல் அவர் வருமானம் ஈட்டியுள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 4,500 கோடி ரூபாய் வருமானம் அதானிக்கு கிடைத்துள்ளது.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஆசியாவின் முதல் 5 பணக்காரர்கள் இவர்கள் தான்:
கௌதம் அதானி - $89.2 பில்லியன்
முகேஷ் அம்பானி - $88.0 பில்லியன்
மசாயோஷி சன் - $87.0 பில்லியன் (ஜப்பான்)
ஸாங் யிமிங் - $69.3 பில்லியன் (சீனா)
ஸாங் சான்சன் - $68.1 பில்லியன் (சீனா)


Click it and Unblock the Notifications


