கவுதம் அதானி ஒரு புகழ்பெற்ற இந்திய தொழிலதிபராவார். இவர் அதானி குழுமத்தை வெற்றிகரமாக நிறுவி.. தற்போது முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக வலம் வருகிறார். உலகிலேயே 19-வது பணக்காரராக கருதப்படுகிறார். இவருடைய வணிகம் பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது. இவரின் நிறுவனங்களில் ஒன்றான அதானி கிரீன் எனர்ஜி, டிசம்பர் காலாண்டில் கணிசமான லாப அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.474 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலண்டோடு ஒப்பிடுகையில் 85 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ. 256 கோடி நிகர லாபத்தை பதிவு செய்ததாக நிறுவனம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மின்சார விநியோகத்திலிருந்து கிடைக்கும் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 1,765 கோடியாக இருந்த நிலையில்.. இந்த ஆண்டு ரூ. 1,993 கோடியாக உயர்ந்துள்ளது. ஜனவரி 23-ஆம் தேதி நிலவரப்படி அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் சந்தை பங்கு ரூ. 1.62 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத்தின் கவுடா பகுதியில் உள்ள மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையையும் ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள ஆலைகயையும் நாங்கள் சீராக உருவாக்கி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டங்களைக் கருத்தில் கொண்டு புதுமையான யுக்தியை பயன்படுத்தி எனர்ஜி ஸ்டோரேஜ் (Battery Energy Storage System - BESS) அமைப்புகளை உருவாக்கி வருகிறோம் என்று தலைமை நிர்வாக அதிகாரி அமித் சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
BESS என்பது பிற்கால பயன்பாட்டிற்காக பேட்டரிகளில் மின் சக்தியைச் சேமிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். BESS, மின்சார தேவையை பூர்த்தி செய்யவும், மின் விரிவாக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதோடு நிறுவனத்தில் 3,131 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் புதிதாக சேர்க்கப்பட்டதன் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்து 11,609 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications