சென்னை: அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி திடீரென 2 முக்கிய நபர்களுடன் சென்னைக்கு செவ்வாய் மாலை வந்தது தமிழ்நாடு தொழில் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானியின் சென்னை பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் அது தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளையும் அதானி சந்தித்ததாக கூறப்படுகிறது.

4 மணிநேர பயணம்: அதானியின் 4 மணிநேர சென்னை பயணத்தில் தமிழ்நாடு அரசு சென்னை அருகே திட்டமிடப்பட்டு வரும் பரந்தூர் புதிய விமான நிலையத்தை உருவாக்குவதிலும், காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்குவதிலும் அதானி குழு ஆர்வமாக இருப்பதை தெரிவிக்கவும், இத்திட்டத்தைக் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறெனினும், செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பு குறித்து இதுவரையில் தமிழ்நாடு அரசிடம் இருந்தோ அல்லது அதானி குழுமத்திடம் இருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
கௌதம் அதானி & டீம்: ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, கௌதம் அதானி தனது சகோதரர் ராஜேஷ் சாந்திலால் அதானி (அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர்), கௌதம் அதானியின் மகன் கரண் அதானி (அதானி துறைமுகங்கள் மற்றும் SEZ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை தனி விமானத்தில் சென்னை வந்திருக்கிறார்கள்.
முதல்வர் வீடு: தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வசிக்கும் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு அதானி குடும்பத்தினர் சென்றதாகவும், ஆனால் முதலமைச்சரை சந்தித்தார்களா என்பது தெளிவாக இல்லை.
அதனைத் தொடர்ந்து, ECR-ல் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இரவு உணவு சாப்பிட சென்று, பின்னர் விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதானி பிஸ்னஸ்: தற்போது, தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 700 மெகாவாட் சோலார் மின் நிலையம் மற்றும் வட சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை இயக்கும் முக்கியமான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.
பரந்தூர் ஏர்போர்ட் திட்ட அறிக்கை: சென்னையில் பரந்தூரில் அமைக்கப்படும் இரண்டாவது விமான நிலையத்திற்கு, தமிழக அரசு விண்ணப்பித்து ஓராண்டுக்குப் பின்பு, அதற்கான இட அனுமதி கோரும் திட்ட அறிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதல் குழுவுக்கு வந்துள்ளதாக இன்று தகவல் வெளியானது.
TIDCO: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) உறுப்பினர்கள், உயர்மட்ட வழிநடத்தல் குழு முன் திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இத்திட்ட அறிக்கை மத்திய அரசின் உயர்மட்ட குழுவை கவர்ந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
வியப்பான விஷயம்: ஆனால் செவ்வாய்க்கிழமையே கௌதம் அதானி, அவரது தம்பி ராஜேஷ் சாந்திலால் அதானி, மகன் கரண் அதானி ஆகியோருடன் சென்னைக்கு தனி விமானத்தில் வந்து பரந்தூர் புதிய விமான நிலையத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி இருப்பது வியப்பளிக்கிறது.


Click it and Unblock the Notifications