அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி பவர் ஜார்கண்ட் லிமிடெட் (APJL), பங்களாதேஷ் நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 850 மில்லியன் டாலர் (சுமார் 7,200 கோடி ரூபாய்) நிலுவை தொகை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் செலுத்தப்படாவிட்டால், மின்சார விநியோகத்தை நிறுத்துவதாக எச்சரித்துள்ளது.
பங்களாதேஷ் அரசு செலுத்தப்படாத 846 மில்லியன் டாலர் நிலுவை தொகை காரணமாக, அதானி பவர் நிறுவனம் ஏற்கனவே மின்சார விநியோகத்தை குறைத்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, அதானியின் மின் நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவு அதன் மின்சார உற்பத்தி அளவீட்டையும் கணிசமாகக் குறைத்தது, இதனால் நாட்டிற்கு 1,600 மெகாவாட் அளவுக்கு மின்சார பற்றாக்குறை ஏற்பட்டது.

சுமார் 1,496 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த மின் உற்பத்தி நிலையம், தற்போது வெறும் ஒரு யூனிட் மட்டுமே இயங்கும் காரணத்தால் 700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
அதானி பவர் சில வாரங்களுக்கு முன்பு பங்களாதேஷ் பவர் டெவலப்மெண்ட் போர்டு-க்கு (PDB) ஒரு கடிதம் அனுப்பியது, அதில் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் நிலுவையைத் தீர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தியது. காலக்கெடுவிற்குள் பணத்தை செலுத்தத் தவறினால், மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் (PPA) விதிமுறைகளின்படி மின் விநியோகத்தை நிறுத்துவதாகவும் நிறுவனம் கூறியிருந்தது.
இருப்பினும், பங்களாதேஷ் பவர் டெவலப்மெண்ட் போர்டு (PDB) இன்னும் பங்களாதேஷ் கிருஷி வங்கியிடமிருந்து 170.03 மில்லியன் டாலர் நிலுவை தொகைக்கான லைன் ஆஃப் கிரெடிட் கடிதத்தை வழங்கவில்லை மற்றும் நிலுவை தொகையை செலுத்தவில்லை என அதானி பவர் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் பவர் டெவலப்மெண்ட் போர்டு வாரந்தோறும் சுமார் 18 மில்லியன் டாலர் செலுத்தி வருகிறது, ஆனால் நிலுவைத் தொகை அதிகரித்த காரணத்தால் தற்போது 22 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பங்களாதேஷ் நாட்டில் அமைக்கப்பட்டதால், பல பிரச்சனைகளை அந்நாட்டுடன் வர்த்தகம் செய்து வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகிறது.
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த விவகாரம் குறித்து நேரடியாகத் தொடர்பு கொண்டும் பேசியுள்ளார். ஆனாலும் 7,200 கோடி ரூபாய் தொகைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.


Click it and Unblock the Notifications