பெங்களூரு: இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற இன்ஜினியர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தை வாரி வழங்குவது தெரிய வந்திருக்கிறது.
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய பன்னாட்டு திறன் கிளைகளான ஜிசிசி மையங்களை இந்தியாவில் நிறுவுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. அப்படி இந்தியாவில் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கான விருப்பமான இடங்களாக இருக்கின்றன. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில் குறைந்தது எட்டு ஆண்டு காலம் அனுபவம் கொண்ட இன்ஜினியர்களுக்கு ஜிசிசி மையங்களில் ஆண்டுக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் வரை சம்பளத்தில் வேலை கிடைப்பதாக மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

பெங்களூரு மட்டுமில்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் இதுபோல ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு ஜிசிசி மையங்கள் லட்சக்கணத்தில் சம்பளத்தை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனவாம். Generative AI, AI observability, AI compliance ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு பாரம்பரியமாக இந்தியாவில் செயல்படும் ஐடி நிறுவனங்களை விட அதிகபட்ச சம்பளத்தை வழங்குவதற்கு ஜிசிசி மையங்கள் தயாராக இருக்கின்றன என குவெஸ் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஐடி சார்ந்த திறன்கள் மட்டும் இல்லாமல் GenAI, FinOps, cloud security ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை. எனவே சிறந்த சம்பளத்தில் நல்ல வேலை வேண்டுமென எண்ணுபவர்கள் இந்த பிரிவுகளில் எல்லாம் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்படுகிறது.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரு தான் ஜிசிசி மையங்கள் அமைக்கப்படுவதிலும் ஜிசிசி மையங்களுக்கான ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வதிலும் முதலிடத்தில் இருக்கிறது. இங்கே ஏஐ பொறியாளர்களுக்கு அதிகபட்சமாக 48 லட்சம் ரூபாய் வரை ஆண்டு சம்பளம் கிடைக்கிறது. அடுத்ததாக ஹைதராபாத்தில் 45 லட்சம், புனேவில் 41 லட்சம் என ஆண்டு ஊதியத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பேங்கிங் மற்றும் பைனான்சியல் சர்வீசஸ், இன்சூரன்ஸ் பிரிவுகளில் ஏஐ ஒருங்கிணைப்பால் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் . சில்லறை மற்றும் இகாமர்ஸ் நிறுவனங்கள் ஏஐ பொறியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்க தயாராக இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. வழக்கமான ஐடி நிறுவனங்களை விட 35% அதிக சம்பளம் கொடுத்து ஜிசிசி மையங்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்துகின்றன. அகமதாபாத், கொச்சி, கோயம்புத்தூர் ஆகிய இரண்டாம் நிலை நகரங்களிலும் ஜிசிசி மையங்கள் அமைக்கப்படுவதால் ஏஐ பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications