சென்னை: இந்தியாவில் தங்களுடைய கிளைகளை நிறுவக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் ஐடி துறை சார்ந்த திறன் வாய்ந்த ஊழியர்களை அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி வருகின்றன. ஐடி துறைகளில் இருந்து ஜிசிசி மையங்களுக்கு வேலைக்கு சென்ற நபர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டு காலத்தில் 35 - 41% வரை உயர்ந்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு வெறும் 30% ஆக தான் இருந்தது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இன் சோர்ஸ் ஐடி மற்றும் பிற செயல்முறை சார்ந்த அலுவல்களை வெளிநாட்டில் நிறுவுவதுதான் குளோபல் கெப்பாசிலிட்டி சென்டர் என அழைக்கப்படுகிறது. இத்தகைய gcc மையங்கள் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நிறுவப்படுகின்றன.
இந்தியாவில் அதிகமாக பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இவ்வாறு இந்தியாவில் தங்களுடைய மையங்களை நிறுவும் பன்னாட்டு நிறுவனங்கள் அதற்கு தேவையான ஊழியர்களை ஐடி துறையில் இருந்து பணிக்கு அமர்த்துகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு ஐடி துறையில் இருப்பவர்கள் ஜிசிசி மையங்களில் பணிக்கு செல்வது கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக பொறியியல் ,ஆய்வு மற்றும் மேம்பாடு, தொழில் செயல்முறை மேலாண்மை மற்றும் ஐடி சேவைகள் ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு ஜிசிசி மையங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாம். கடந்த 2022 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஜிசிசி நிறுவனங்கள் பெருமளவில் இந்தியாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கின. எனவே ஜிசிசி மையங்களுக்கான ஊழியர்கள் தேவையும் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. அதற்கு மாறாக ஜிசிசி மையங்கள் அந்த ஊழியர்களை பணிக்கு மறுத்துவதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. 2024 ஆம் நிதி ஆண்டு அறிக்கை படி இந்தியாவை சேர்ந்த டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ,டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கிட்டதட்ட 70 ,000 ஊழியர்களை குறைத்துவிட்டன. ஆனால் ஜிசிசி மையங்கள் இந்தியாவில் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை 2.4 லட்சம் என அதிகரித்துள்ளன. இந்தியாவில் ஜிசிசி மையங்கள் 2023 ஆம் ஆண்டில் 1.66 மில்லியன் பேர் பணி புரிந்தனர், இது 2024 ஆம் நிதி ஆண்டில் 1.9 மில்லியன் என உயர்ந்துள்ளது.
எனவே அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் , மெஷின் லேர்னிங் பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு ஜிசிசி மையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது என்கின்றனர் இந்த துறை சார்ந்த நிபுணர்கள். மேலும் கர்நாடக அரசு ஜிசிசி மையங்களுக்கென தனி நகரத்தையே நிறுவ இருப்பதால் இந்த துறை பிரகாசமானதாக இருக்கிறது என்கின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications