நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் தாக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் இரண்டு காலாண்டில் வளர்ச்சி சரிவடைந்திருந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 0.4% வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் காலாண்டிலேயே ஜிடிபி 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு, 23.9% மோசமான வீழ்ச்சியினைக் கண்டது. இதே இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவினைக் கண்டிருந்தது.
கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

வளர்ச்சி அதிகரிக்கும்
தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வரையிலும் கூட சில கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. எனினும் நிபுணர்கள் கணித்ததை போலவே டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருகின்றது. இந்த நிலையில் இனி அடுத்து வரும் காலாண்டிலும் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி
எனினும் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8% சரிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி விகிதமானது 0.1% வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் 0.2% வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே 8 துறைகளின் வெளியீடு - 8.8% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 0.8% ஆக இருந்தது.

முதல் இரண்டு காலாண்டில் வளர்ச்சி
முதல் இரண்டு காலாண்டினை பொறுத்தவரையில், தொழில்துறைகள், வணிக சேவைகள், சேவைத் துறை என பலவும் முடங்கின. இதனால் ஜிடிபி விகிதம் மைனஸில் சென்றது. எனினும் தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் வழக்கம்போல செயல்பட ஆரம்பித்துள்ளன. அலுவலகங்கள் தற்போது பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

அடுத்தடுத்த காலாண்டில் வளர்ச்சி காணலாம்
இதனால் மக்களின் செலவினங்களும் அதிகரித்துள்ளது. இதனால் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆக முந்தைய இரண்டு காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது டிசம்பர் காலாண்டில் ஒரளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.
எனினும் எதிர்வரும் காலாண்டுகளில் இந்த விகிதமானது சற்று முன்னேற்றம் காணலாம். இதனால் அடுத்தடுத்த காலாண்டுகளில் படிப்படியான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.