1997 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் பிறந்தவர்களை ஜென் ஸீ (Gen Z) தலைமுறையினர் என அழைக்கிறோம். தற்போது உலகில் பெரிய அளவிலான இளம் படைகளாக உருவாகி இருக்கிறார்கள் இவர்கள். பணி இடங்களிலும் தற்போது இவர்கள்தான் படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி இருக்கிறார்கள் .
வேலை செய்வதில் தொடங்கி அனைத்திலும் முந்தைய தலைமுறைக்கு முற்றிலும் மாறுபட்டு செயல்படுகிறார்கள் ஜென் ஸீ தலைமுறையினர். பல நிறுவனங்களில் ஜென் ஸீ தலைமுறை ஊழியர்களை எங்களால் கையாளவே முடியவில்லை என மேலாளர்கள் புலம்புவதை நாம் பார்க்க முடிகிறது. இவர்களை பொறுத்தவரை வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சமமான நேரம் ஒதுக்குவது உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.

தற்போது இவர்கள் சமூகத்தில் முக்கியமான ஒரு மாற்றத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன என்பதை நாம் தற்போது இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். இளைய தலைமுறையினர் பார்ட்டி செய்வது மற்றும் மது அருந்தும் கலாச்சாரத்தில் இவர்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் சனிக்கிழமை இரவு என்றாலே பெரும்பாலான இளைஞர்கள் பார்ட்டிக்கு செல்வார்கள் மது அருந்துவார்கள் . இரவு முழுவதும் கொண்டாட்டத்தோடு இருப்பார்கள் . அதிகமாக மது அருந்திவிட்டு காலையில் எழுந்தவுடன் ஹேங்க் ஓவர் பாதிப்புகளிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் மதுபான துறையும் ஹேங்க் ஓவரால் ஏற்படும் பிரச்சினைகளுக்கான மருத்துவ துறையும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.
ஆனால் தற்போது இருக்கக்கூடிய இந்த ஜென் ஸீ தலைமுறையினர் இந்த பார்ட்டி கலாச்சாரத்தையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக பார்ட்டிக்கு செல்வது ஹேங்க் ஓவர் ஆனது பின்னர் அதற்கு வைத்தியம் செய்து கொள்வது என ஒரு ஹேங்க் ஓவர் இண்டஸ்ட்ரியே படிப்படியாக வளர்ந்து வந்தது . தற்போது 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு துறையாக உலகம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது.

ஜென் ஸீ தலைமுறையினர் இதனை மாற்றி அமைத்திருக்கின்றனர். பார்ட்டி என்றாலே அதிக அளவு மது அருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு பதிலாக ஆல்கஹால் கலக்காத பானங்களை இவர்கள் அதிக அளவில் அருந்துகிறார்களாம். ஒரு கேட் டூ கெதர் ஒரு பார்ட்டி என்றாலே மது தான் அருந்த வேண்டும் என்ற நிலையை மாற்றி இருக்கிறார்கள். குறைந்த அளவு ஆல்கஹால் கொண்ட பானங்கள் அல்லது முற்றிலும் ஆல்கஹாலே கலக்காத பானங்களை இவர்கள் அதிகம் எடுத்துக் கொள்கிறார்களாம்.
பார்ட்டிக்கான வைப் வேண்டும் அதற்காக ஆல்கஹால் குடித்து உடம்பை கெடுத்து கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இந்த தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதாவது ஜாலியாகவும் இருக்க வேண்டும் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
இதன் விளைவு ஆல்கஹால் அல்லாத பானங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 35 வயதுக்குட்பட்ட மதுபானம் அருந்துபவர்களின் எண்ணிக்கை 72 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இந்தியாவிலும் ஆல்கஹால் கலக்காத மதுபானங்களுக்கான சந்தை ஆண்டுக்கு 8 சதவீதம் என வளர்ச்சி அடைந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் இது 32 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் 2033 ஆம் ஆண்டில் இது 68 பில்லியன் டாலர்களாக உயரும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. உலக அளவிலும் ஆல்கஹால் அல்லாத பானங்களுக்கான சந்தை என்பது 2025 ஆம் ஆண்டில் 1.41 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது இது 2034 ஆம் ஆண்டில் 2.68 டிரில்லியன் டாலர்களாக உயரும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.குயிக் காமர்ஸ் செயலிகள் வருகை ஆல்கஹால் அல்லாத பானங்களை ஆர்டர் செய்து அருந்துவதை எளிமையாக்கி இருக்கிறது. இதுவும் ஜென் ஸீ தலைமுறைக்கு சாதகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications