ஒருபக்கம் செயற்கை நுண்ணறிவு கண்டு மக்கள் அஞ்சினாலும், மறுப்பக்கம் பல தரப்பினர் இதைப் பெரிய அளவில் வரவேற்று வருகின்றனர். குறிப்பாக நிறுவனங்கள் தரப்பில் AI தொழில்நுட்பத்தை அதிகளவில் ஆதரித்து வருகின்றனர், இந்த நிலையில் இந்தியாவுக்கு ஏஐ மூலம் என்ன லாபம் என ஒரு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
உலகளாவிய டெக் துறையில் AI ஆதிக்கம் பெரிய அளவில் அதிகரித்து வரும் வேளையில், அனைத்துப் பிரிவுகளிலும் AI பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி-யில் சுமார் 1.2 - 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கூடுதலாகச் சேர்க்கும் என EY நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

டிசம்பர் 17 அன்று EY இந்தியா நிறுவனம் வெளியிட்ட 'The AIdea of India: Generative AI's potential to Accelerate India's Digital Transformation' என்ற தலைப்பிலான அறிக்கையில், ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை இந்தியா மூலதனமாகப் பயன்படுத்துவதன் மூலம், 2029-30 நிதியாண்டில் மட்டும் சுமார் 359-438 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஜிடிபியை கூடுதலாக இந்திய பொருளாதாரத்தில் சேர்க்க உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
அடுத்த 7 ஆண்டுகளில் 1.2 - 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சியை ஜெனரேட்டிவ் ஏஐ மட்டுமே கொடுக்கப்போகிறது எனில் அனைத்து துறையிலும் ஏஐ சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய சேவைகளும், பலன்களும் அதிகரிக்கப் போகிறது.
இந்தியாவில் தற்போதைய வர்த்தகச் சந்தையில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் ஏஐ அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், இந்த வேகம் அடுத்த சில ஆண்டுகளில் கட்டாயம் உயரும் வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் ஒவ்வொரு துறையிலும் ஏஐ சேவை வரும். கல்வி முதல் மருத்துவ வரை, கழிவறை முதல் விமானம் வரையில் ஏஐ பயன்பாடு வரும்.
இந்தியாவில் ஏஐ மூலம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி வளர்ச்சியில் சுமார் 69 சதவிகிதம் சேவைகள் வணிகச் சேவைகள், நிதிச் சேவைகள், கல்வி, சில்லறை வணிகம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் ஏஐ பயன்படுத்துவது மூலம் நடக்கும் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வுக்காக EY கணக்கெடுக்கப்பட்ட சுமார் 75 சதவீத நிறுவனங்களில் தற்போது ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தைத் தனது வணிகங்களுக்கு இன்றியமையாததாக இருப்பதாகக் கூறியது.
இந்த ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஊழியர்களின் உற்பத்தித்திறன், சிறந்த இயக்க திறன் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் தற்போதைய அளவில் இருந்து பல மடங்கு மேம்படுத்தப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இதன் காரணமாகவே கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் ஐபிஎம் போன்ற தொழில்நுட்ப சாம்ராஜ்ஜியங்கள் மிகவும் மேம்பட்ட என்டர்பிரைஸ் ஜெனரேட்டிவ் AI சொல்யூஷன்ஸ் மற்றும் கருவிகளை உருவாக்கி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் கூகுள் தனது மிகவும் திறன் வாய்ந்த AI மாடலான ஜெமினியை அறிமுகப்படுத்தியது, இது OpenAI இன் GPT-4 மற்றும் Meta's Llama 2 ஆகியவற்றை ஓரம்கட்ட கூடிய திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications