வாழ்க்கையில் எல்லாருமே எட்டாத உயரத்துக்கு செல்ல வேண்டும் என்றுதான் துடிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அப்படியொரு இடத்துக்குச் சென்றுள்ளார் ஒரு இந்தியர். தனக்கெற்பட்ட முட்டுக்கட்டைகளையெல்லாம் தகர்த்து எறிந்து விட்டு அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். அவரது பெயர் ஜார்ஜ் வி நேரெம்பரம்பில்.
ஒரு மெக்கானிக்காக இருந்தவர் இப்போது துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் சொகுசின் உச்சத்தில் குடியிருக்கிறார்.

புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் உள்ள 900 அபார்ட்மெண்ட்களில் 150 இந்தியர்களுக்குச் சொந்தமானவை ஆகும். இதில் ஜார்ஜ் சொந்தமாக 22 ஆடம்பரமான அப்பார்ட்மெண்ட்களை வைத்துள்ளார்.
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜார்ஜின் குடும்பம் ஒருகாலத்தில் பொருளாதார ரீதியில் மிகுந்த சிக்கலில் இருந்துள்ளது. தனது 11 ஆவது வயதில் தன் தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளை செய்துள்ளார். அத்துடன் பகுதி நேரமாக பழைய சாமான்களை விற்கும் தொழிலை ஜார்ஜ் செய்துள்ளார்.
எனது ஊரைச் சேர்ந்த மக்கள் பருத்தியை விற்பார்கள். ஆனால் பருத்தி விதைகளை தூக்கி எறிந்து விடுவார்கள். அந்த சமயத்தில் நான் அந்த விதைகளில் இருந்து கோந்து தயாரித்து விற்பேன் என்று கூறும் ஜார்ஜ் ஒரு மெக்கானிக்காகவும் வேலை பார்த்துள்ளார். இந்த நிலையில் அவர் ஷார்ஜாவுக்கு சென்ற பிறகு அவரது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.
மத்திய கிழக்கு பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வந்த நிலையில் பாலைவன உஷ்ணத்தைப் போக்குவதற்கு ஏர் கண்டிஷனிங் தொழிலில் நல்ல வாய்ப்பு இருப்பதை ஜார்ஜ் அறிந்து கொண்டார்.
அவரது தொழில் யோசனையை அடிப்படையாக வைத்து இன்றைக்கு ஜிஇஓ குரூப் ஆப் கம்பெனிகளின் உரிமையாளராக உள்ளார். இதனால் வளைகுடா பகுதியில் மிகப் பெரிய தொழில் அதிபராக ஜார்ஜ் உருவெடுத்தார்.
புர்ஜ் கலீஃபாவின் விலையுயர்ந்த சொத்துக்களை வாங்குவதில் ஜார்ஜ் ஆர்வமாக இருந்தார். அவரது ஆசையைக் கேட்ட உறவினர் ஒருவர் புர்ஜ் கலீஃபாவுக்குள் நுழைய முடியாது என்று அவரை கிண்டல் செய்தார். இதனால் ரோஷமடைந்த ஜார்ஜ் 2010 ஆம் ஆண்டில் ஒரு பிரதான கட்டடத்தில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார்.
பின்னர் அவர்புர்ஜ் கலீஃபாவில் சுமார் 22 சொகுசு அபார்ட்மெண்ட்களை அடுத்தடுத்து சொந்தமாக்கினார். அவரது அடுக்குமாடி குடியிருப்புகளின் சுவர்கள், கூரைகள் மற்றும் தளங்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கத்தால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ஜார்ஜ் இன்னும் திருப்தி அடையவில்லை. புர்ஜ் கலீஃபாவில் இதுபோன்ற சொகுசு அடுக்கு மாடிகளை வாங்க ஆசைப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது ரூ. 4800 கோடி.
நான் இந்த 22 அபார்ட்மெண்ட்களுடன் ஓயப் போவதில்லை. எனக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்தால் இன்னும் அதிகமாக வாங்குவேன். நான் ஒரு கனவு காண்பவன், நான் கனவு காண்பதை நிறுத்தவே மாட்டேன்" என்று ஜார்ஜ் கூறினார்.


Click it and Unblock the Notifications