ஈரான் போர் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலைகளை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்த ஒரு சிக்கலும் இதுவரை ஏற்படவில்லை. எல்பிஜி விநியோகத்தில் மட்டும் தொடக்கத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது அதுவும் அரசு தற்போது சரி செய்து விட்டது.
இந்த சூழலில் ஈரான் போர் இந்திய மக்களுக்கு மூன்று முக்கியமான பிரச்சனைகளைத் தரும் என ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனருமான கீதா கோபிநாத் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஈரான் போர் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு உணவு , எரிபொருள் மற்றும் உரம் தொடர்பான பெரிய பிரச்சினை ஏற்படும் எனக் கூறியிருக்கிறார். இது நேரடியாகவே மக்களை பாதிக்கும் என்கிறார்.

இந்த மோதல் விரைவில் தணிந்தால் அதன் உடனடி தாக்கம் குறைவாகவே இருக்கும் ஆனால் அப்படி நடக்காத பட்சத்தில் அதன் தாக்கத்தை இந்தியா அதிக அளவு எதிர்கொள்ளும் எனக் கூறுகிறார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகிற்கான மிகப்பெரிய எண்ணெய் நெருக்கடி என்றும் 1970களில் இந்த உலகம் கண்டதை விட மிகப்பெரியது என்றும் அவர் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஈரான் போர் எத்தனை காலம் நீடிக்கிறதோ அதை பொறுத்துதான் உலகத்தின் வளர்ச்சியே தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார். அடுத்த வாரம் அல்லது அதற்குள் அனைத்தும் தீர்க்கப்பட்டால் உலகளாவிய வளர்ச்சி சுமார் 0. 3 சதவீத புள்ளிகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவிக்கிறார். எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலர்கள் என்று அளவிலேயே நீடிக்கிறது எனும் போது உலக பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம் என சரிவடையும் என்று குறிப்பிடுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஈரான் போர் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி என குறிப்பிடும் அவர் அதே வேளையில் அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருட்களுக்கான வரியை குறைந்தது ஒரு சாதகமான நிகழ்வு இதனால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என கூறுகிறார். நடப்பு நிதியாண்டின் இந்தியாவின் வளர்ச்சி 6.5%ஆக இருக்கும் என அவர் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அதே வேளையில் ஈரான் போர் நீண்ட காலமாக நீடிக்கும் போது இந்தியா பல்வேறு மோசமான விளைவுகளை சந்திக்கும் என கூறுகிறார். குறிப்பாக மூன்று பிரச்சினையை சந்திக்கும் என்கிறார் . இந்தியா தன்னுடைய எண்ணை மற்றும் எரிவாயு , உரவு ஆகிய மூன்றுக்கும் மத்திய கிழக்கு நாடுகளை தான் சார்ந்து இருக்கிறது. இதனால் இந்தியா நீண்ட கால அடிப்படையில் இதன் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என கூறுகிறார்.
இந்திய அரசால் நீண்ட காலத்திற்கு மானிய விலையில் மக்களுக்கு எரிபொருட்களை வழங்க முடியாது என தெரிவித்திருக்கும் அவர் இது ஒட்டுமொத்தமாக நாட்டின் பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அரசு இந்த நிதிச் சுமையை மக்கள் மீது தான் சுமத்த வேண்டிய சூழல் உண்டாகும் என அவர் தெரிவித்திருக்கிறார். உரம் சப்ளை முற்றிலும் நின்று போயிருக்கிறது உரம் வராமல் இருப்பது இந்திய விவசாயத்துறையையே பெருமளவில் பாதிக்கும் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications

