சர்வதேச பொருளாதாரத்திற்கு அடுத்த பிரச்சனை யெமன் நாட்டின் ஹவுதி குழுவின் கப்பல்கள் மீதான தாக்குதல்கள். தற்போது ஜெர்மனி நாட்டின் Hapag-Lloyd மற்றும் ஹாங்காங் OOCL ஆகியவை வியாழனன்று செங்கடலில் பயணிப்பதை தவிர்க்கும் என்று தெரிவித்தன். செங்கடலில் என்ன நடக்கிறது வாங்க பார்ப்போம்.
கடந்த அக்டோபர் 7ம் தேதியன்று ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரை கொன்று குவித்தனர். மேலும், சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். இதனையடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படையினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் காஹா பகுததியை முற்றுகையிட்டு தீவிரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தரைவழியாக காஸாவுக்கு நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதேவேளையில், இஸ்ரேல் தனது வடக்கு பகுதியில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர், வெஸ்டபேங்க் பகுதியில் பாலஸ்தீனியர்களின் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யெமன் நாட்டை சேர்ந்த ஆயதக் குழுவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கு வேறு விதமாக தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
செங்கடலில் இஸ்ரேலை நோக்கி பயணிக்கும் அல்லது இஸ்ரேலில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தி வருகிறது.
உலகின் வர்த்தக பொருட்களில் 80 சதவீதம் சரக்கு கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதாவது ஆண்டுக்கு 14 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான மதிப்பில் கப்பலில் சரக்குகள் பயணிக்கின்றன. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதமாகும்.
உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வர்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்த கடல் நேராக சூயஸ் கால்வாய் செல்கிறது. ஆசியாவில் இருந்து சரக்கு கப்பல்கள் ஆப்பரிக்காவை சுற்றி செல்லாமல் ஐரோப்பாவுக்கு செல்வதற்கு ஒரே ஒரு வழித்தடம் இந்த கால்வாய் தான்.
ஐரோப்பாவுக்கு சூயல் கால்வாய் மற்றும் செங்கடல் வழியாக கப்பல்கள் பயணிப்பதன் மூலம் கப்பல்கள் 30 நாட்களுக்கும் அதிகமான பயண காலத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் செலவினமும் மிச்சமாகும். தற்போது ஹவுதி அமைப்பினர் செங்கடலின் தெற்கு பகுதியில் குறுகிய அமைப்பான பாபெல்-மாண்டேப் நீரிணை பகுதியில் கடக்கும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுவரை ஹவுதி அமைப்பினர் 15 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இந்தியாவுக்கு வந்த ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் அடங்கும்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் சூயஸ் கால்வாயை அணுகுவது பெரிய ரிஸ்க் என்ற நிலை உருவாகியுள்ளது. பல கப்பல்கள் இந்த பாதையை தவிர்க்க தொடங்கி விட்டன, இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை உயர வழிவகுத்துள்ளது.
அதேசமயம், ஹவுதியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச கடல் பாதுகாப்பு நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஹவுதியின் கொட்டத்தை அடக்க தற்போது அமெரிக்காவுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது.
முதலாவது செங்கடலில் சரக்கு கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா அதிக போர் கப்பல்களை கொண்டு வர முடியும் இரண்டாவது ஏடன் வளைகுடா மற்றும் பிராந்தியத்தில் அதன் இருப்பை வலுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
ஏமனில் பெரும்பான்மையான சன்னி பிரிவினர் தலைமையான அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழு ஹவுதி. இந்த குழுவினர் ஜயாதி ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். 1990களில அப்போதைய ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலேயின் ஆட்சி மீது ஊழல் குற்றம் சாட்டி, ஆட்சிக்கு எதிராக போராடுவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பை தொடங்கிய ஹூசைன் அல் ஹவுதியின் பெயரே அமைப்புக்கும் வைக்கப்பட்டது. ஏமனின் அதிகாரப்பூர்வ அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவாக உள்ளது. அதேசமயம் ஹவுதி அமைப்பினருக்கு ஈரான் பக்கபலமாக இருக்கிறது. ஹவுதி அமைப்பினரிடம் முன்பு ஏமன் அரசிடம் இருந்த ஏவுகணைகளை இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அந்த அமைப்பு சப்ளை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications