உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சங்கள் காரணமாக திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இன்று இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் பெரும்பாலான நாடுகளில் பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் அல்லது 2.95% குறைந்து 73,137 புள்ளிகளில் முடிவடைந்தது. அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 குறியீடு 742 புள்ளிகள் அல்லது 3.24% குறைந்து 22,161 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இணைந்து அனைத்து துறை பங்குகளையும் விற்பனை செய்த நிலையில் துறைவாரியாக அனைத்து குறியீடுகளிலும் ரத்தகளரியாக காட்சி அளித்தது. குறிப்பாக உலோகம், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் பெரிய அளவில் சரிந்தது.
இந்த வீழ்ச்சியின் விளைவாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 14 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 389 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.
இன்று, ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் கடுமையான சரிவை பதிவு செய்தன. குறிப்பாக, ஹாங்காங் பங்குச் சந்தை 13.6% என்ற அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சியுடன் முதலிடத்தில் இருந்தது. தைவான் மற்றும் ஜப்பான் சந்தைகளும் முறையே 9.6% மற்றும் 9.5% என்ற பெரிய சரிவுகளை சந்தித்தன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
ஐரோப்பிய சந்தைகளும் பெரும் இழப்புகளை சந்தித்தன. இத்தாலி பங்குச் சந்தை 8.4% சரிந்தது. சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் சந்தைகள் தலா 8% மற்றும் 7% சரிந்தன. சீனாவும் சுவிட்சர்லாந்தும் தலா 7% சரிவை பதிவு செய்தன. ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் தலா 6%க்கும் அதிகமான சரிவை சந்தித்தன. இங்கிலாந்தின் பங்குச் சந்தை 5.2% சரிந்தது.
ஆசிய சந்தைகளில், மலேசியா 4.5% சரிந்தது. பிலிப்பைன்ஸ் சந்தை 4.3% சரிந்தது. இந்திய சந்தை 4.1% வீழ்ச்சியை சந்தித்தது. ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா சந்தைகள் முறையே 3.8% மற்றும் 3.3% சரிந்தன. துருக்கி சந்தை 2.8% குறைவான சரிவை பதிவு செய்தது.
இந்த உலகளாவிய சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் வர்த்தகப் போர் குறித்த அச்சங்களே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications