உலக நாடுகளின் பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இதுநாள் வரையில் தப்பித்து வந்தது பெரும் ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம் ரெசிஷன் உச்சக்கட்டத்தை அடையும் முன்னரே வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
ஆனால் இனி வரும் காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ளும் எனப் பல அமைப்புகள் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுப் பாதிப்பு தணிந்து உலக நாடுகளில் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை நிலையான வளர்ச்சிப் பாதையை அடைந்து இயங்கிக் கொண்டு இருக்கும் போது ரஷ்யா உக்ரைன் போர் மொத்த கதையும் மாறியது என்றால் மிகையில்லை.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர் மூலம் எரிபொருள் முதல் உணவுப் பொருட்கள் வரையில் உற்பத்தி சப்ளை ஆகியவை பாதிக்கப்பட்டுப் பொருளாதார வர்த்தக வளர்ச்சியில் பெரிய ஓட்டை பணவீக்கம் அதிகரிப்பால் விழுந்தது.
மத்திய வங்கி
பணவீக்கத்தைக் குறைக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டதால் இந்தியா மட்டும் அல்லாமல் அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது.
சர்வதேச பொருளாதார
சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்தும் பாதிக்கப்படும். இதனால் அடுத்த 2 வருடத்திற்கு நாட்டின் பொருளாதாரம் மோசமாகத் தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரம் 2021-22 ஆம் நிதியாண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2022 காலண்டர் ஆண்டில் 6.9 சதவீதமாகவும், 2023 காலண்டர் ஆண்டில் 5.9 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது கோல்டுமேன் சாச்சஸ். 2023 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் இரண்டு விதமாக இருக்கும் எனக் கோல்டுமேன் சாச்சஸ் கணிக்கப்பட்டு உள்ளது.
2023 இப்படித் தான் இருக்கும்
அதாவது வருடத்தின் முதல் பாதியில் பொருளாதார வளர்ச்சி காரணிகள் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்யும், இதற்கு முக்கியக் காரணமாக வட்டி விகித உயர்வால் பணப்புழக்கம் குறைந்து உள்நாட்டுத் தேவை பாதிக்கப்படுவதால் முதல் பாதி மந்தமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. 2ஆம் பாதியில் வளர்ச்சி கரணிகள் உலகளவில் சிறப்பாக இருக்கும் எனக் கணிக்கப்படுவதால் ஏற்றுமதியில் அதிகரிப்பு, முதலீட்டுச் சுற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது கோல்டுமேன் சாச்சஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
கணிப்பு
மேலும் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஆர்பிஐ 7 சதவீதமாகவும், கிரிசில் 7 சதவீதமாகவும், கோல்டுமேன் சாச்சஸ் 5.9 சதவீதமாகவும், மூடிஸ் 4.8 சதவீதமாகவும் சரியும் எனக் கணித்துள்ளது. இந்தச் சரிவு ஏற்றுமதி வர்த்தகத்தில் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி அளவு அக்டோபர் மாதத்தில் 17 சதவீதம் சரிந்து 29.73 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்றுமதி அளவு 35.78 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதி சரிவால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 27 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications