பெங்களூரு: இந்தியாவில் சாட்டிலைட் அடிப்படையில் டோல் கட்டணங்களை வசூலிக்கும் அமைப்பு கூடிய விரைவில் பெங்களூரு மற்றும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Global Navigation Satellite System (GNSS)) என அழைக்கப்படும் இந்த வகையிலான சுங்க கட்டண வசூல் முறை அமலுக்கு வரும்போது தற்போது நாட்டில் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
தற்போது சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஃபாஸ்ட்டேக் முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்த நடைமுறை மாற்றப்பட உள்ளது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்துள்ள செய்தியில், தற்போதைய சூழலில் இந்தியாவில் இரண்டு நெடுஞ்சாலைகளில் சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் அமைப்புக்கான சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளனர். இதில் ஒன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை ஆகும்.

சோதனை ஓட்டத்திற்கான நடைமுறைகள் கூடிய விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இதை தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் இந்த ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வரி நடைமுறையை அமல்படுத்துவதற்கான பொறுப்பினை ஏற்றுள்ளது.
இதன்படி பெங்களூரு மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை எடுத்துக்கொண்டு அங்கே இந்த நடைமுறை செயல்படுத்தி பார்க்கப்படும். நெடுஞ்சாலைகளில் இதற்காக ஜியோ ஃபென்சிங் அமைக்கப்பட உள்ளது. ஒரு வாகனம் நெடுஞ்சாலையில் நுழையும் போதே அந்த சாஃப்ட்வேர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அடிப்படையாகக் கொண்டு அந்த வாகனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும்.
அந்த நெடுஞ்சாலையில் நுழைந்து வெளியேறும் வரை அந்த வாகனம் நெடுஞ்சாலைக்குள் எவ்வளவு தொலைவுக்கு பயணம் செய்துள்ளது என்பதை கணக்கிட்டு அதற்கேற்ற வகையில் சுங்க கட்டணத்தை இது கழித்துக் கொள்ளும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண முறை நடைமுறைக்கு வரும்போது அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாகப்பட்டிருக்கும். அதே வேளையில் நம்பர் பிளேட்டுகள் வாயிலாகவும் இதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதற்கான சோதனையும் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆட்டோமேட்டிக் கேமராக்கள் (Automatic Number Plate Recognition cameras) மூலம் நம்பர் பிளேட் அடிப்படையில் வாகனம் பயணம் செய்த தொலைவானது கணக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
தற்போது விற்பனையாக கூடிய புதிய வாகனங்கள் அனைத்திலுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது. இதன்படி மக்களுக்கும் சுங்க கட்டணம் குறையும் என சொல்லப்படுகிறது.
தற்போது ஒரு நெடுஞ்சாலையில் எவ்வளவு தூரத்தை பயன்படுத்தினாலும் ஒரு நிலையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் ஜிஎன்எஸ்எஸ் நெடுஞ்சாலையில் நாம் எவ்வளவு தொலைவு பயன்படுத்தி இருக்கிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications