கோவா: இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக செயல்படக்கூடிய கோவாவில் அண்மைக்காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருகிறது. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கோவாவிற்கு வருகை தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கோவா வெறிச்சோடி காணப்பட்டது.
கோவாவில் டாக்ஸி வாடகைகள் ஒழுங்கமைக்கப்படாமல் இருப்பது, போதிய அளவில் பொது போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பது, ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுரண்டப்படுவது என பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பலரும் சமூக வலைத்தளங்களில் கோவாவில் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.
இந்த சூழலில் கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகளோடு முக்கியமான ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். சுற்றுலா துறையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக கோவாவை திருமணங்கள் நடைபெறுவதற்கு விருப்பமான ஒரு இடமாக மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருமணம், பெரிய நிறுவனங்களின் ஆலோசனை கூட்டம் நடத்த ஏதுவாக கோவாவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதே போல கோவாவில் கடற்கரைகளில் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தும் வகையில் வசதிகளை கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கும் நடைமுறையை கொண்டு வரப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
அதேபோல கோவா முழுவதும் வாடகை வாகனங்களின் கட்டணங்களை ஒரே சீராக மாற்றுவதற்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவா மாநில அரசு சுற்றுலாத்துறை சார்ந்த இயங்கக்கூடிய நிறுவனங்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறது.
அப்போது சுற்றுலாப் பயணிகள் பலரும் மாநிலத்தில் இயங்கும் டாக்ஸி நிறுவனங்கள் மீது பல்வேறு புகார்களை முன் வைப்பதாக கூறப்பட்டது. அதிக அளவிலான கட்டணம் விதிப்பது, மோசமான சேவை வழங்குவது, சுற்றுலாப் பயணிகளிடம் தகாத முறைகளில் ஓட்டுநர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பன உள்ளிட்ட புகார்கள் வருவதாக அப்போது கூறப்பட்டது.
இதனை அடுத்து கோவாவில் டாக்ஸி கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக ஒரு குழுவை நியமனம் செய்துள்ளது. கோவா மாநில காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
டாக்ஸி சேவை சார்ந்த செயலிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, டாக்ஸி கட்டணங்களை ஒழுங்கு படுத்துவது, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, ஒரே சீரான கட்டணங்கள் வசூலிப்பதை உறுதி செய்வது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை இந்த குழுவானது ஆய்வு செய்து கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் செயல்பட்டு வரும் சில டாக்ஸி யூனியன்கள் அங்கே டாக்சி செயலிகள் இயங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஓலா, ஊபர் போன்ற செயலிகளில் இணைந்து வாகனம் ஓட்டும் டாக்ஸி ஓட்டுனர்களை அச்சுறுத்துவதாகவும் அச்சுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதேபோல விமான நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் செயல்படக்கூடிய பேருந்துகள், டெம்போ டிராவலர்களை ஆங்காங்கே நிறுத்தி அச்சுறுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டினால் தான் கோவாவில் சுற்றுலா துறை மீண்டு வரும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications