பெங்களூரு: உணவு பொருட்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கின்றன. இந்த செயற்கை நிறமூட்டிகளை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு செயற்கை நிறமூட்டிய பஞ்சு மிட்டாய்களை தடை செய்தது. இதனை அடுத்து மார்ச் 11ஆம் தேதி கர்நாடக மாநில அரசும் செயற்கை நிறமூட்டிய கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்தது.

செயற்கை நிறமூட்டிகளில் இருக்கக்கூடிய ரோட்டாமைன் பி மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் மற்றும் பிற பாதிப்புகளை உண்டாக்குகிறது. எனவே செயற்கை நிறமூட்டி கலந்த கோபி மஞ்சூரியனை விற்க கூடாது என கர்நாடக அரசு அறிவித்தது.
இதனால் பெங்களூருவில் கோபி மஞ்சூரியன் சார்ந்த வணிகம் பெரும் சரிவை கண்டுள்ளது. குறிப்பாக கோபி மஞ்சூரியன் விற்பனை செய்து வந்தவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அரசு இந்த முடிவை அறிவித்ததில் இருந்து பெங்களூருவில் கோபி மஞ்சூரியன் சார்ந்த வணிகம் 80 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தி ஹான்ஸ் இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறமூட்டிகள் சேர்க்கப்படாத கோபி மஞ்சூரியங்களுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை என்றும் இதன் காரணமாக வருவாய் கணிசமாக குறைந்து விட்டது என்றும் கோபி மஞ்சூரியன் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கோபி மஞ்சூரியன் நுகர்வோரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்றும் வியாபாரம் நடத்தி பிழைப்பு செய்வது பெரும் சவாலாக உள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.10,000 வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது அது தற்போது ரூ.5,000க்கு வியாபாரம் செய்வதே கடினமாகிவிட்டது என கூறுகின்றனர்.
முதலீடு செய்து மூலதனம் கூட திரும்பவில்லை என்றும் இயற்கையான கோபி மஞ்சூரியனை எந்த வண்ணமும் இல்லாமல் தயார்படுத்தி விற்பனை செய்கிறோம் ஆனால் மக்கள் இதனை விரும்பி வாங்க முன்வருவதில்லை என்கிறார் பெங்களூருவில் கடை வைத்திருக்கும் ராஜேஷ்.
செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்துவதை தடை செய்தது தங்கள் தொழிலுக்கு மிகப்பெரிய அடி என்றாலும், அதனை ஏற்றுக் கொண்டு இயற்கையான முறையில் கோபி மஞ்சூரியனை செய்து நாங்கள் விற்கிறோம் மக்கள் இதனை நம்பி உண்ணலாம் என கூறுகிறார்.
செயற்கை நிறமூட்டி கலந்த கோபி மஞ்சூரியனுக்கு தான் அரசு தடை விதித்துள்ளதே தவிர ஒட்டுமொத்தமாக கோபி மஞ்சூரியனையே சாப்பிட கூடாது என கூறவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.
Story written by: devika


Click it and Unblock the Notifications