செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை அசர வைக்கிறது. இதனால் நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்க தான் செய்கின்றன. இந்நிலையில் AI துறையின் தந்தை (Godfather of AI) என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் ஏஐ குறித்து ஒரு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பத்தால் உலக அளவில் பெரிய அளவிலான பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்துள்ளார். இந்த தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கியிருக்காவிட்டால் மனிதகுலம் இன்னும் பாதுகாப்பான நிலையில் இருந்திருக்குமோ என்ற ஐயத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.

ஜெஃப்ரி ஹிண்டன் குறிப்பிடும் பேரழிவு என்பது அணு ஆயுத போர் மட்டுமல்ல. மாறாக,ஏஐ மூலம் மின்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் டிஜிட்டல் தாக்குதல்கள் அல்லது பவர் கிரிட்கள் மற்றும் உலகளாவிய நிதி அமைப்புகள் திடீரென முடங்குவது போன்ற பெரிய சம்பவங்களையே அவர் குறிப்பிடுகிறார். ஏஐ மூலம் ஏற்படும் ஆபத்துகள் உலகையே நீண்ட காலத்திற்கு முடக்கிப்போடும் வல்லமை கொண்டதாக இருக்கும் என்கிறார்.
இந்த மாதிரியான பெரிய விபத்துகள் அல்லது நெருக்கடிகள் அடுத்த ஆண்டிற்குள்ளாகவே நடக்க தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். இது உலக தலைவர்களை தீவிரமாக யோசிக்க வைக்கும் என தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து மீறி நம்மையே கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக மாறும் என எச்சரிக்கும் அவர் இது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை தரும் என கூறியுள்ளார்.
போதைப்பொருள் மற்றும் மருந்து பொருட்களுக்கு அமெரிக்காவின் FDA போன்ற அமைப்புகள் எப்படி கடுமையான பரிசோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றதோ அதேபோல் AI நிறுவனங்களும் தங்களது புதிய மாடல்கள் வெளியிடுவதற்கு முன்பு அது ஆபத்தானதா இல்லையா என்பதற்கான நம்பகமான ஆதாரங்களை ஒரு சுதந்திரமான அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் , சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஒரு பேட்டியில், ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தை முழுமையாக அழிக்கக்கூடிய ஆபத்து கொண்டது என்றும், அதனை முற்றிலுமாக மறுத்து விட முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தாலும் நாம் சரியான விழிப்புணர்வுடன் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டால் இந்த பேராபத்தை தவிர்க்க முடியும் என்றும், இன்னும் நிலைமை நமது கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது எனறும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

