இரண்டாக உடைந்த கோத்ரேஜ் குழுமம்.. 127 வருட சாம்ராஜ்ஜியத்தில் பிளவு..!!

இந்தியாவில் பல பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் வாரிசு கைகளுக்கு மாறி வருவது போல், பல சாம்ராஜ்ஜியங்களுடைய குடும்பத்திற்கு மத்தியில் பிரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பேமஸ் ஆன கோத்ரேஜ் குழுமம் தற்போது இரண்டாக உடைந்துள்ளது.

127 ஆண்டுகளாக சோப்பு, வீட்டு உபகரணங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் கோத்ரேஜ் குழுமம் 2ஆக பிரிவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

இரண்டாக உடைந்த கோத்ரேஜ் குழுமம்.. 127 வருட சாம்ராஜ்ஜியத்தில் பிளவு..!!

மறுபுறம், ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் பட்டியலிடப்படாத கோத்ரேஜ் & பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் மும்பையில் முக்கியமான பகுதிகளில் உள்ள முதன்மை நிலங்களை மொத்தமாகக் கைப்பற்றுகின்றனர்.

கோத்ரேஜ் குழுமத்தை நிறுவிய நிறுவனரின் குடும்பத்திற்கு மத்தியில் இரண்டு கிளைகள் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் 82 வயதான ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது 73 வயதான சகோதரர் நாதீர் கோத்ரேஜ் உள்ளனர் மறுபுறம் 75 வயதான ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் 74 வயதான ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

ஆதி கோத்ரேஜ் மற்றும் நாதீர் கோத்ரேஜ் உடைய சித்தப்பா வாரிசுகள் தான் ஜாம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் ஸ்மிதா கோத்ரேஜ் கிருஷ்ணா.

கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் குழுமம் - ஏரோஸ்பேஸ் மற்றும் விமான போக்குவரத்து முதல் பாதுகாப்பு, பர்னிச்சர் மற்றும் ஐடி மென்பொருள் வரை பல்வேறு துறைகளில் செயல்படும் கோத்ரேஜ் & பொயிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களைக் கொண்டது.

இதை இனி ஜாம்ஷெட் கோத்ரேஜ் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக கட்டுப்பாட்டில் இயங்கும். அவரது சகோதரி ஸ்மிதாவின் மகள் 42 வயதான நிரிகா ஹோல்கர் இந்நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குநராக இருப்பார். இதோடு மும்பையில் உள்ள 3,400 ஏக்கர் நிலப்பகுதி உட்பட நில தொகுப்பை இவர்கள் நிர்வகிப்பார்கள்.

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் - பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், கோத்ரேஜ் ப்ராபர்ட்டீஸ், கோத்ரேஜ் அக்ரோவெட் மற்றும் ஆஸ்டெக் லைப்சயின்ஸ் ஆகியவற்றைக் கொண்டது.

இதை நாதீர் கோத்ரேஜ் தலைமையில் இனி செயல்படும், மேலும் நிர்வாக குழுவிலும், நிர்வாக பொறுப்பிலும் ஆதி, நாதீர் மற்றும் அவர்களின் வாரிசுகள் அடங்கிய குடும்பத்தினர் நிர்வகிப்பார்கள்.

கோத்ரேஜ் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதியின் மகனான 42 வயதான பிரோஜ்ஷா கோத்ரேஜ் (Pirojsha Godrej), கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராக இருப்பார், மேலும் ஆகஸ்ட் 2026 இல் நாதீர் ஓய்வு பெற்ற பிறகு தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பிரிவினையை "உரிமைகளின் மறுசீரமைப்பு" என்று கோத்ரேஜ் குடும்பம் குறிப்பிட்டு உள்ளது.

1897 இல் வழக்கறிஞராக இருந்து தொழிலதிபராக மாறிய அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர், மருத்துவ சாதனங்கள் தயாரிப்பில் தோல்வியடைந்த பிறகு பூட்டுத் தொழிலில் வெற்றி பெற்றதன் மூலம் கோத்ரேஜ் குழுமம் உருவானது.

அர்தேஷிருக்கு குழந்தைகள் இல்லை, எனவே இக்குழுமம் அவரது இளைய சகோதரர் பிரோஜ்ஷாவால் (Pirojsha) கைப்பற்றப்பட்டது. பிரோஜ்ஷாவுக்கு நான்கு குழந்தைகள் - சோராப், தோசா, பர்ஜோர் மற்றும் நேவல்.

பல ஆண்டுகளாக, குழுவின் தலைமையானது பர்ஜோர் (ஆதி மற்றும் நாதிர்) மற்றும் நேவல் (ஜம்ஷித் மற்றும் ஸ்மிதா) ஆகியோரின் குழந்தைகளுக்கு வந்தது. இதில் சோராப்-க்கு குழந்தைகள் இல்லை, தோசாவுக்கு ஒரு குழந்தை ரிஷாத், ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் மொத்த கோத்ரேஜ் குழுமமும் பர்ஜோர் மற்றும் நேவல் ஆகியோரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தற்போது இவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில் வர்த்தகம் இரண்டாக உடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+