சென்னை: இந்தியாவின் பிரபல கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சென்னையில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் புகழ்பெற்ற கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சென்னையில் 350 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய இருப்பதாக அதன் துணைத் தலைவரான விகாஸ் சௌதாஹா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சௌதாஹா அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்த துறையின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் எங்களது உற்பத்தி திறனையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். அதாவது அலமாரிகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யக்கூடிய தங்களது தொழிலை மேலும் விரிவுபடுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

தற்போதைக்கு கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை அருகே அம்பத்தூரில் 27 ஏக்கர் பரப்பளவில் ஒரு உற்பத்தி ஆலை இருக்கிறது. இது ஆண்டுக்கு 90,000 டன் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. இதுவரை இது அதிகபட்சமாக 66,000 டன் உற்பத்தியை செய்துள்ளது.
அடுத்த 18 மாதங்களில் இந்த ஆலையில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என சௌதாஹா தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் இதற்காக சென்னைக்கு அருகிலேயே மேலும் ஒரு புதிய ஆலையை நிறுவ இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது தங்களுடைய உற்பத்தி ஆலை அமைந்திருக்கக்கூடிய அம்பத்தூர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிற்குள் புதிய உற்பத்தி ஆலை நிறுவப்படும் என்றும் கூறியுள்ளார்.
புதிய ஆலைக்கான நிலத்தை தேடி வருவதாகவும் நிலம் கிடைத்தவுடன் 350 முதல் 400 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஆலை நிறுவப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தங்களுடைய உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளார். 2024 ஆம் நிதி ஆண்டில் கோத்ரேஜ் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 1000 கோடி ரூபாயாகும்.
நடப்பாண்டில் தங்களுடைய தங்கள் நிறுவனத்தின் ஏற்றுமதி விகிதத்தை அதிகரிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தற்போது உள்ள அளவிலிருந்து 20 சதவீதமாக ஏற்றுமதியை உயர்த்த இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தங்கள் நிறுவனத்தின் வருமானம் 2027 நிதியாண்டில் 1,600 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் தங்களது நிறுவனம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்திருப்பதாக கூறியுள்ளார். சென்னை அம்பத்தூரில் புதிய உற்பத்தி ஆலை அமைவதன் மூலம் அந்த பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications