1997 முதல் 1998-ஆம் ஆண்டிற்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கருதப்படுகிறது. அப்போதைய நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட், "ட்ரீம் பட்ஜெட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பட்ஜெட் ஏன் இப்படி அழைக்கப்பட்டது, அதன் தனித்தன்மைகள் என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்த பட்ஜெட், 13 கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அந்த ஆண்டில் ஒரு திடீர் திருப்பமாக அமைந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த எச்.டி. தேவ கவுடா தலைமையில் இயங்கிய அந்த கூட்டணி ஆட்சியில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தனித்துவமான சீர்திருத்தங்களை முன்வைத்தது.

ட்ரீம் பட்ஜெட்டின் சீர்திருத்தங்கள்: சிதம்பரம் தனிநபர்களுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைத்தார். மேலும் உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதத்தை 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைத்தார். சுங்க வரி 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டு, கலால் வரியும் குறைக்கப்பட்டது.
மேலும், கூடுதல் வரி (surcharge) விதிப்பதை நிறுத்தி, ராயல்டி விகிதங்களையும் குறைத்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டு வரம்பையும் உயர்த்தினார்.
அரசிடம் தெரிவிக்கப்படாத வருமானம் உள்ளவர்களுக்கு, அவர்கள் வருமானத்தை எந்த ஆண்டில் பெற்றது, எந்த வழியில் பெற்றது என்பது பற்றிய தகவல் இல்லாமல், வருமானத்தை வெளிப்படுத்தினால், தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்ற திட்டத்தை சிதம்பரம் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு "Voluntary Disclosure of Income Scheme (VDIS)" என்று பெயர் வைத்தார். இதற்கு வரி மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி அல்லது தண்டனை எதுவும் கிடையாது என்றும் அறிவித்தார்.
1996 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச மாற்று வரிக்கான (MAT) சில விதிகளையும் தளர்த்தினார். நிறுவனங்கள் சில சமயங்களில் தள்ளுபடிகள், விலக்குகள் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டினாலும், குறைந்த வரி செலுத்தும் நடைமுறை இருந்தது.
இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் "MAT". இதன் கணக்குப்படி, ஒரு நிறுவனம் வழக்கமான முறையில் குறைந்த வரி செலுத்த வேண்டியிருந்தாலும், நிறுவனத்தின் லாபத்திற்கு குறைந்தபட்ச வரி தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும். இதன் மூலம், நிறுவனங்கள் வரி கட்டுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல், அரசுக்கு எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் கிடைக்கிறது.
ட்ரீம் பட்ஜெட்டில் இந்த சீர்திருத்தங்கள் ஏன் செயல்படுத்தப்பட்டன?: சிதம்பரம் குறைந்த வரி விகிதங்கள் மக்களுக்கும் அரசுக்கும் இணக்கத்தை அதிகரிக்கும் என்று நம்பினார். எனவே, அதிகமான மக்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்த முன் வந்தனர்.
ட்ரீம் பட்ஜெட்டின் முடிவு என்ன?: ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, 1997-ஆம் ஆண்டில் ரூ. 18,700 கோடியாக இருந்த வருமான வரி வசூல் 2013-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கோடியாக உயர்ந்தது.


Click it and Unblock the Notifications