எங்கும் டிஜிட்டல், எதிலும் டிஜிட்டல் என்பதை நோக்கி இந்தியா பயணிக்கிறது என்பதில் மாற்றமில்லை. இதற்கு சான்றாய் தற்போது பிஸிக்கல் கோல்டை தள்ளி, மக்கள் டிஜிட்டல் கோல்டை வாங்கத் தொடங்கியுள்ளனர். தங்கமாக வாங்குவதில் சில பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதிக அளவிலான நகை வீட்டில் இருக்கும்போது அதை பாதுகாக்க வேண்டிய பயம், அதோடு நகைகளாக வாங்கினால் செய்கூலி, விற்பனை செய்யும் போது சேதாரம், மேலும் தங்கத்தின் தூய்மை, இத்தனை விஷயங்களை தங்கம் வாங்கும்போது பார்க்க வேண்டியது அவசியம். இதனால் தான் இன்றைய தலைமுறையினர் ஸ்மார்டான இன்வெஸ்ட்மெண்ட்டை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அதற்காக தற்போது கோல்ட் ETF-கள் மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட்கள் ஆகிய இரண்டும் இளைய தலைமுறையின் பிரத்தியேக முதலீடாக இருந்து வருகிறது.
கோல்ட் ETF என்றால் என்ன?: கோல்ட் ETF என்பது தங்கத்தின் விலையை பொறுத்து செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். பங்குச்சந்தையில் எப்படி ஷேர் வாங்குகிறோமோ அதேபோல கோல்ட் யூனிட்களையும் வாங்கலாம். தேவைப்பட்டால் விற்பனை செய்யலாம். இது டீமேட் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும் தங்கம். தங்கத்திற்கு இருப்பது போல இதற்கு செய்கூலி எதுவும் கிடையாது. தேவைப்பட்டால் ஒரே தவணையாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது சிறுக சிறுக கோல்ட் ETF-களில் முதலீடு செய்யலாம். கோல்ட் ETF-இல் முதலீடு செய்தால் உங்கள் ஃபண்டை நிர்வகிக்க வருடாந்திர கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட் (EGR): தேசிய பங்குச் சந்தையில் எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிப்ட் எனும் புதிய வர்த்தக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் எவ்வளவு தங்கத்தை வாங்குகிறீர்களோ? அது டிஜிட்டல் முறையில் உங்களுடைய டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு EGR ரெசிப்டுக்கும் அதற்கு சமமான எடை உள்ள உண்மையான தங்கம் செபியின் பாதுகாப்பு பெட்டகங்களில் வரவு வைக்கப்படும்.

எலக்ட்ரானிக் கோல்ட் ரெசிபிட்கள் உண்மையிலேயே தங்க விலையின் அடிப்படையில் செயல்படக்கூடியவை. நீங்கள் 100 மில்லி கிராம் தொடங்கி 1 கிலோ வரையில் எவ்வளவு வேண்டுமானாலும் கோல்ட் EGR-களை வாங்கலாம். தங்கத்தின் தூய்மையை பற்றி கவலைப்பட அவசியமில்லை. ஏனெனில் உங்களுடைய முதலீடுக்கு 24 கேரட் தங்கம் தான் வரவு வைக்கப்படும். பங்குச்சந்தையின் வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை EGR தங்கத்தை எளிதில் வாங்கலாம். உங்களிடம் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இருந்தாலே EGR தங்கத்தில் முதலீடு செய்யலாம். தேவைப்படும்போது அந்த தங்கத்தை விற்று பணமாகவும் மாற்றலாம் அல்லது கோல்ட் பார்களாகவும் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த இரண்டிற்குமே இருக்கும் முக்கிய அம்சம் என்ன தெரியுமா? அதன் லிக்விடிட்டி. லிக்விடிட்டி என்றால் வேறு ஒன்றும் இல்லை. எப்படி நகையை அவசர தேவைக்கு அடகு வைத்து அல்லது விற்று பணம் பெறுகிறோமோ அதே போலவே கோல்ட் ETF மற்றும் EGR போன்றவற்றை பயன்படுத்தலாம். கோல்ட் ETF நீண்ட நாட்களாக இருப்பதால் இதில் லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். ஆனால் EGR இப்போது தான் வந்திருக்கிறது. இதில் வர்த்தகம் செய்யும் மக்களின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே இருக்கிறது.
கோல்ட் ETF-கள் பெரும்பாலான முன்னணி டிரேடிங் ஆப்களில் கிடைக்கிறது. எஸ்ஐபி முறையிலும் இதில் முதலீடு செய்யலாம். ஆனால் ஈஜிஆர் புதிதாக வந்திருப்பதால் அனைத்து ஆன்லைன் புரோக்கரேஜ் தளங்களிலும் முழுமையாக இன்னும் கிடைக்கவில்லை. எனவே நிஜ தங்கத்தை போலவே முதலீடு செய்ய வேண்டும், ஆனால் விலை ஏறும் போது எனக்கு பணமாக கிடைத்தால் போதும் என்பவர்களுக்கு கோல்ட் ETF-கள் சரியான சாய்ஸ். அதுவே நான் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இருக்கிறேன். ஆனால் பிற்காலத்தில் நான் முதலீடு செய்யும் தொகையை நிஜ தங்கமாக வாங்கிக் கொள்ள நினைக்கிறன் என்று கூறுபவர்களுக்கு EGR-கள் நல்ல சாய்ஸ்!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications