ஆல் இந்தியா ஜெம் அண்ட் ஜுவல்லரி டொமஸ்டிக் கவுன்சில் (GJC) இந்த பண்டிகை காலத்தில் சில்லறை தங்க விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. அமெரிக்காவில் தங்கத்திற்கான தேவை குறைந்து உள்ளதால் ஏற்றுமதியில் மந்தநிலை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், GJC கவுன்சில் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. GJC கவுன்சிலின் இயக்குநர் கமல் சிங்கானியா, இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் சில்லறை விற்பனை 120 டன்களை எட்டும் என்று மதிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பண்டிகைக்கால தங்க நகை விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தங்க நகைகளின் சில்லறை விற்பனை 92 டன்களை எட்டியது.

தங்கம் விலை 10 கிராமுக்கு 80,000-த்தை எட்டி இருந்தாலும் தங்கத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக மக்களின் ஈர்ப்பு தங்க நகைகள் மீது அதிகரித்துள்ளது. இது உள்நாட்டிலும் தேவையை அதிகரித்தது என்று கமல் சிங்கானியா கூறியுள்ளார்.
தங்கத்திற்கான தேவை உலகளாவிய சந்தை போக்குகளை பொறுத்து மாறுபடுகிறது. குறிப்பாக மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரிக்கக் கவனம் செலுத்தி வருகிறது. RBI உட்பட அனைத்து மத்திய வங்கிகளும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்கத்தை அதிக அளவில் வாங்குகின்றன. மத்திய வங்கிகள் சுமார் 40 சதவீத கையிருப்பை வைத்திருக்க திட்டமிட்டுள்ளன.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தனது தங்கக் கையிருப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2024-ஆம் ஆண்டில் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக இங்கிலாந்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 டன் தங்கத்தை ஆர்பிஐ சொந்த நாட்டுக்கே கொண்டு வந்தது. தளவாடக் காரணங்களுக்காகவும், பல்வகைப்பட்ட சேமிப்புக்காகவும் அடுத்த சில மாதங்களில் இதே அளவு தங்கத்தை அதன் கையிருப்பில் சேர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மார்ச் 2024 இறுதியில், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் 822.1 டன் தங்கம் இருந்தது. அதில் 413.8 டன்கள் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் சமீபத்திய ஆண்டுகளில் சிக்கலான புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் தங்கத்தை வாங்குகின்றன.
சமீபத்தில் நடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்கவரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை தற்போது 80,000 ரூபாயை எட்டியுள்ளது. ஒருவேளை சுங்கவரி குறையாமல் இருந்திருந்தால் 90,000 ரூபாயாக இருந்திருக்கும். சுங்கவரி குறைப்பு இல்லாமல் வெள்ளி விலை 1.15 லட்சம் ஆக இருந்திருக்கும்.
ஆனால் இப்போது கிலோவுக்கு 1 லட்சம் ரூபாயாக தான் இருக்கிறது என்று சிங்கானியா கூறியுள்ளார். இந்தியா முழுவதும் 3500 சில்லறை நகைக்கடைகள் பண்டிகை காலத்தில் தங்களுடைய வியாபாரத்தை பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications