இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்ட நிலையில் ரெப்போ விகிதம், ஜிடிபி வளர்ச்சி, பணவீக்கம் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களையும் அறிவிக்காத நிலையில் முதலீட்டு சந்தை பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் இயல்பாக செயல்படுகிறது.
இந்த நிலையில் ஆர்பிஐ இன்றைய கூடடத்தில் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் (யுசிபி) புல்லட் ரீபேமெண்ட் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள தங்கக் கடன்களின் வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, முன்னுரிமைத் துறை கடன் (priority sector lending) வழங்குவதன் கீழ் ஒட்டுமொத்த இலக்குகள் மற்றும் துணை இலக்குகளை எட்டிய நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், தங்கக் கடன் வாங்குபவர்களுக்கு புல்லட் ரீபேமெண்ட் திட்டத்தின் கீழ் இந்த அதிகரிக்கப்பட்ட வரம்பு அனுமதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிக்கப்பட்ட கடன் வரம்புகளை பெற இந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மொத்த இலக்குகள் மற்றும் துணை இலக்குகளை தொடர்ந்து அடைய வேண்டும். இந்த விஷயத்தில் விரிவான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளுக்கு எந்த அளவுக்கு வாய்ப்புகளை அளிக்கிறதோ அதே அளவுக்கு கண்டிப்பான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
புல்லட் ரீபேமெண்ட் திட்டம் என்றால் என்ன..? : புல்லட் ரீபேமெண்ட் திட்ட விருப்பத்தில், கடன் பெறுபவர்கள் அசல் மற்றும் வட்டித் தொகையை கடன் காலத்தின் முடிவில் முழுவதுமாக செலுத்த வேண்டும். கடன் பெற்றவர்கள் EMI அபின்பற்றுவது அல்லது கடனின் காலம் முழுவதும் பகுதியளவு பணம் செலுத்துவது பற்றி கவலைப்படத் தேவையில்லை.
ஆனால் தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் முழுக் காலத்தின் ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், ஆனால் மொத்த அசல் மற்றும் வட்டித் தொகையானது கடன் காலத்தின் முடிவில் ஒரே பேமெண்ட்-ல் செலுத்தப்படும்.
கடன் வாங்குபவர்கள் கடனை ஒரே பேமெண்ட்டில் திருப்பிச் செலுத்துவதால், இந்த வகை கடனுக்கு புல்லட் ரீபேமெண்ட் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. கடன் வாங்குபவர்கள் வழக்கமான மாதாந்திர EMI-களை செலுத்த தேவையில்லை என்பதால், கடனைத் திருப்பிச் செலுத்த அதிக நேரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications