இந்திய மக்களுக்கு ஒரு அவசர நிதி தேவை என்றால் உடனடியாக கை கொடுப்பது வீட்டில் இருக்கக்கூடிய தங்கம் தான். தங்கத்தை கொண்டு சென்று நிதி நிறுவனங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடகு வைத்தால் அடுத்த 15லிருந்து 30 நிமிடங்களில் பணம் கைக்கு வந்து விடும்.
இந்தியாவில் வேறு எந்த ஒரு பொருளையும் இத்தனை எளிதாக நம்மால் பணமாக மாற்ற முடியாது. இதனால் தான் இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் குடும்பங்கள் தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஏனெனில் தங்கம் ஒரு ஆபரணமாகவும் அந்தஸ்துக்கான அடையாளமாகவும் மட்டும் இல்லாமல் அவசர பணத்தேவையை உடனடியாக பூர்த்தி செய்யக் கூடிய ஒரு சொத்தாகவும் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை கடந்தது, ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1,30,000 ரூபாய் என்ற மதிப்பை தாண்டியது. தங்கத்தின் இந்த விலை உயர்வு இந்தியாவில் தங்க கடன்களின் அளவை மிக வேகமாக அதிகரிக்க செய்திருக்கிறதாம்.
ஸெரோதா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி பார்க்கும்போது இந்தியாவில் நிலுவையில் இருக்கக்கூடிய தங்க கடன்களின் மதிப்பு 4.6 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்தியாவில் தற்போது கிரெடிட் கார்டு கடன்களை விட தங்க நகை கடன்களின் அளவு பல மடங்கு அதிகரித்திருப்பதாக அது கூறுகிறது. இந்தியாவில் தற்போது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய் அதுவே தங்க நகை கடன்களின் நிலுவை மதிப்பு 4.6 லட்சம் கோடி கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேல் இது அதிகம் என அந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக கடந்த 2025 ஆம் ஆண்டு மத்தியிலிருந்து தான் இந்தியாவில் கிரெடிட் கார்டு கடன் அளவு குறைந்து தங்க நகை கடன்கள் அளவு அதிகரித்திருக்கிறது. இதற்கு தங்கத்தின் விலை உயர்ந்தது முக்கிய காரணமாகும். வங்கிகளும் தங்க நகை கடன்களை வழங்குவதற்கு தான் பல்வேறு சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஏனெனில் கிரெடிட் கார்டுடன் ஒப்பிடும்போது தங்க நகை கடன்கள் வங்கிகளுக்கு பாதுகாப்பானவை. ஒருவேளை தாங்கள் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை என்றால் வங்கிகள் உடனடியாக அந்த நகைகளை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளும்.
பொதுமக்களை பொறுத்தவரை தங்கள் கைவசம் இருக்கும் தங்கததிற்கு முன்பை விட அதிக பணம் கிடைக்கிறது, அதுவுக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது, உடனடியாக பணம் கிடைக்கிறது இந்த மூன்று விஷயங்களும் பொதுமக்களையும் தொடர்ந்து தங்க நகை கடன்களை நோக்கி தள்ளுகிறது.
தங்க நகைகளை அடகு வைத்த கடன் வாங்க கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை, பெரிய அளவில் ஆவணங்களும் தேவைப்படுவதில்லை. பெர்சனல் லோன், கிரெடிட் கார்டுடன் ஒப்பிடுகையில் இதில் வட்டி குறைவு என்பதால் சாமானிய மக்களுக்கு தங்க நகை கடன்கள் தான் லாபம்.


Click it and Unblock the Notifications

