வீட்டில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தால் தான் பேங்க் லாக்கரில் நகைகளை வைக்கின்றனர். ஆனால் பேங்க் லாக்கரிலிருந்தே நகைகள் காணாமல் போனால் என்ன செய்வது? இப்படி ஒரு சம்பவம் டெல்லியைச் சேர்ந்த பெண்மணிக்கு நடந்துள்ளது. அவருக்கு வங்கியின் சார்பில் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. பேங்க் லாக்கர் முடக்கப்பட்டாலோ அல்லது லாக்கரில் இருந்த நகை காணாமல் போனாலோ அதில் இருந்த பொருளுக்கு யார் பொறுப்பு?, வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
டெல்லி நரைனா விகாரைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய மாமனார் உடன் இணைந்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஜாயின்ட் லாக்கர் ஒன்றை வைத்திருந்தார். ஆனால் அந்த லாக்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்மணிக்கு தெரியாமல் ரத்து செய்யப்பட்டது. அதற்கான வாடகையை மட்டும் வருடா வருடம் அவருடைய கணக்கிலிருந்து எடுத்து வந்துள்ளனர்.

ஒரு நாள் லாக்கரைப் பயன்படுத்த வங்கிக்கு சென்றபோதுதான் அதிலிருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இது அந்தப் பெண்ணுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர் டெல்லி மாநில நுகர்வோர் குறைதீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அன்று அந்தப் பெண் தொடுத்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. நுகர்வோர் ஆணையம் வங்கிக்கு கடுமையான உத்தரவுகளை பிரிப்பித்தது. அதன்படி 2018-ஆம் ஆண்டின் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி வரை ரூ.47 லட்சம் தொகைக்கு 6 சதவீத வட்டியுடன் பணத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் வாடிக்கையாளர்க்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வழக்கு தொடர்ந்த செலவுக்கு தனியாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளருக்கு தெரியாமல் வங்கி லாக்கரை ரத்து செய்ய முடியுமா?: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வங்கிகள் வாடிக்கையாளர் பெற்ற லாக்கரை ரத்து செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக வாடிக்கையாளர் கையெழுத்து போட வேண்டும்.
அதேபோல கூட்டு லாக்கரை வைத்திருந்தால் யார் யாரெல்லாம் உரிமையாளர்களோ அவர்களுக்கெல்லாம் வங்கி முறைப்படி தெரியப்படுத்த வேண்டும். மேலும் அவர்களுடைய சம்மதம் இன்றி ஒரு தலை பட்சமாக லாக்கரை ரத்து செய்யவோ அல்லது திறக்கவோ கூடாது.
தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை வங்கி லாக்கருக்கு வாடகை செலுத்தாமலோ அல்லது லாக்கரை பயன்படுத்தாமலோ இருந்தால் அதை உடைத்து பார்க்க வங்கிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்கும் வாடிக்கையாளர்களுக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்ப வேண்டும்.
லாக்கரில் இருக்கும் பொருட்கள் காணாமல் போனால் வங்கி எப்போது பொறுப்பேற்கும்?: கொள்ளை, தீ விபத்து மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்படும் பிற இழப்புகள் காரணமாக பொருட்கள் காணாமல் போனால் அதற்கு வங்கியே முழு பொறுப்பேற்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி லாக்கரின் ஆண்டு வாடகை எவ்வளவோ அதைவிட 100 மடங்கு தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும். ஆனால் இயற்கை பேரிடர் ஏற்பட்டு பொருட்கள் காணாமல் போனாலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்தால் இது போன்ற தவறுகள் நடந்தாலோ வங்கி பொறுப்பேற்காது.
இழப்பீட்டுக்கான வரம்பு நீதிமன்றத்தை அணுகும் போது மாறக்கூடும். வங்கியின் தவறால் இழப்பு ஏற்படும் போது பொருட்களின் முழு மதிப்பு என்ன என்பதை பொருத்தும் நீதிமன்றம் அதற்கு ஏற்ப உத்தரவிடும். எனவே இந்த 100 மடங்கு என்பது பொதுவாக உள்ள விதிமுறை.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: லாக்கரில் பொருட்கள் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி புகார் அளிக்க வேண்டும். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் கேட்கலாம். வங்கி உங்களுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்பிஐ-யின் இணையதளமான cms.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
இதன் மூலம் ரூ.30 லட்சம் வரை இழப்பீடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.3 லட்சம் வரை அபராதம் பெற முடியும். இதைவிட பெரிய அளவிலான இழப்பு ஏற்பட்டு இருந்தால் 2 ஆண்டுகளுக்குள் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரலாம்.
வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள் என்னென்ன?: லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நகை வாங்கியதற்கான ரசீது, அதன் மதிப்பீட்டுச் சான்றிதழ். நகையின் புகைப்படம் என சில முக்கியமான ஆவணங்களை வைத்திருப்பது பிற்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வங்கி நிர்வாகம் லாக்கர் எப்போது திறக்கப்படுகிறது எப்போது மூடப்படுகிறது என்ற நேரத்தை மட்டுமே பதிவு செய்து வைத்திருக்கும். அதில் இருக்கும் பொருட்கள் என்ன என்பது அவர்களுக்கே தெரியாது. எனவே வாடிக்கையாளர்கள் அதில் இருக்கும் பொருட்கள் தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பது மிக மிக முக்கியம்.


Click it and Unblock the Notifications
