அந்தக் காலத்தில் ஹால்மார்க் எதுவும் கிடையாது. தாத்தா பாட்டியிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தை பார்த்தீர்களானால் உங்களுக்கே தெரியும். எழுத்துக்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு வந்த நகைகளில் கேரட் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது எந்த நகை கடையில் நகைகளை விற்றாலும் அதில் கேரட் பொறிக்கப்பட்டிருக்கிறதா? ஹால்மார்க் இருக்கிறதா? என்று நகைக்கடைக்காரர்கள் பரிசோதிக்கின்றனர்.
இதனால் பழைய தங்கத்தை முன்னோர்களின் நினைவுகளோடு வைத்திருக்கும் சிலரும் இனிவரும் நாட்களில் அதன் மதிப்பு குறைந்து விடுமோ என்று பயப்படுகின்றனர். இந்தப் பதிவில் பழைய தங்கத்தை விற்று விடலாமா? எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்கலாமா? அல்லது புதிய டிசைனாக மாற்றலாமா? என்பதைத்தான் பார்க்கவுள்ளோம்.

புல்லியன் இணையதள தகவலின் படி 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை தற்போது 1,42,500 ரூபாயாக உள்ளது. அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2016-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 28,624 ரூபாயாக மட்டுமே இருந்தது.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2006-ஆம் ஆண்டில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை வெறும் ரூ.8400-ஆக மட்டுமே இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர்.. 1976-ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 432 ரூபாய் தான்.
50 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய தங்கத்தை தற்போதைய விலைக்கு விற்கலாமா? அல்லது புதிய டிசைனாக மாற்றலாமா? இதற்கான முடிவை எடுப்பதற்கு நீங்கள் 5 விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
நகையின் தூய்மை மற்றும் நிகர எடை: நகையின் மொத்த எடையை மட்டும் வைத்து அதன் மதிப்பை முடிவு செய்ய முடியாது. அதில் உள்ள கற்கள், மணிகள் போன்ற பொருட்களை எல்லாம் கழித்து விட்டு அதன் பிறகு தான் தங்கத்தின் எடையை கணக்கிட வேண்டும். ஹால்மார்கிங் இல்லாத பட்சத்தில் ஹால்மார்க் முத்திரையை பரிசோதிப்பது நல்லது.
நகையின் மதிப்பு: பழைய நகைகளுக்கு பின்னால் குடும்ப நினைவுகள் அடங்கியிருக்கும். எனவே பழைய நகைகளை நீங்கள் அணியப் போகிறீர்களா? விற்கப் போகிறீர்களா? அல்லது அடுத்த தலைமுறைக்கு வழங்க போகிறீர்களா? என்பதை முடிவு செய்யுங்கள். மேலும் ஆன்டிக் மாடலாக இருந்தால் அந்த நகைகளுக்கு தனி மதிப்பு உண்டு. அந்தக் காலத்தில் செய்யப்பட்ட நகைகளை விரும்பி வாங்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே அதை பழைய தங்கம் என்று நினைத்து அவசரப்பட்டு விற்பனை செய்து விடாதீர்கள்.
விற்பனை விலையைக் கண்காணியுங்கள்: உங்கள் பழைய தங்க நகைகளுக்கு இன்றைய மதிப்பில் பணம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நகைக்கடைக்காரர்கள் சேதாரம், கழிவு என சில தொகைகளை குறைப்பார்கள். உதாரணமாக உங்களிடம் 20 கிராம் மதிப்புள்ள தங்க நகை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இன்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.13,070.
அப்படியானால் உங்கள் 20 கிராம் தங்கத்திற்கு மொத்தமாக ரூ.2,61,400 வரும். ஆனால் கடைக்காரர்கள் அதிலிருந்து ரூ.5000 கழித்துக் கொள்வார்கள். அப்படியானால் உங்களுக்கு கையில் கிடைப்பது ரூ.2,56,400-ஆக மட்டுமே இருக்கும்.எனவே பழைய தங்க நகைகளை விற்பனை செய்வதற்கு முன்னர் 2,3 கடைகளில் விசாரித்து சேதாரம் எல்லாம் கழித்தது போக எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
எக்ஸ்சேஞ்ச் செய்வது நல்லதா?: பழைய தங்கத்தை கொடுத்து புதிய நகையாக வாங்கும் போது அவற்றோடு செய்கூலி, சேதாரம், 3 சதவீத ஜிஎஸ்டி ஆகியவை சேரும். எனவே உங்கள் பழைய 20 கிராம் நகைக்கு.. நகை கடைக்காரர் ரூ.2,56,400 தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அதே 20 கிராம் எடையுள்ள புதிய நகையை வாங்கும்போது 10 சதவீதம் செய்கூலி, 3 சதவீதம் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து ரூ.2,96,166 வரும். எனவே 20 கிராம் நகையை கொடுத்து அதே 20 கிராம் புதிய நகையை வாங்குவதற்கு நீங்கள் மேற்கொண்டு ரூ.39,766 கொடுக்க வேண்டி வரும்.
வருமான வரி: பழைய நகையை பாரம்பரியமாக பெறும்போது வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஆனால் அதை நீங்கள் விற்பனை செய்தால் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். நகையை 24 மாதங்களுக்கும் அதிகமாக வைத்திருந்து.. அதன் பிறகு விற்றால் நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
உதாரணமாக 2006-ம் ஆண்டு உங்கள் பெற்றோர் ரூ.50,000-த்திற்கு வாங்கிய நகையை உங்களிடம் தருகிறார்கள். அந்த நகையை நீங்கள் தற்போது ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்கிறீர்கள் என்றால்.. அதற்கு கிடைத்த லாபம் ரூ.1.5 லட்சம். இதற்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்படும். நீங்கள் ரூ.18,750 செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications
